உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயன்பாடற்ற சோபா, படுக்கைகள் வீடு தேடி வந்து வாங்குது மாநகராட்சி

பயன்பாடற்ற சோபா, படுக்கைகள் வீடு தேடி வந்து வாங்குது மாநகராட்சி

சென்னை :வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும், சோபா, படுக்கைகள் உள்ளிட்ட பழைய பொருட்களை, சனிக்கிழமைதோறும் வீடுகளில் நேரடியாக பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினசரி 6,300 டன் திடக்கழிவு சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நீண்டகாலமாக தேங்கி கிடக்கும் குப்பையையும் மாநகராட்சி அகற்றி வருகிறது. அதேநேரம், வீடுகளில் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் அல்லாத மரப்பலகைகள், சோபா, படுக்கைகள் உள்ளிட்ட பொருட்கள், வீடுகளில் தேக்கமடைந்து காணப்படுகின்றன. சிலர், சாலையோரங்களிலும், குப்பை தொட்டி அருகிலும் போட்டு விடுகின்றனர். துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை எடுத்தாலும், சோபா, படுக்கைகள் உள்ளிட்டவற்றை எடுக்காமல் விட்டு விடுகின்றனர். அவை, அங்கேயே இருப்பதால், கொசு உற்பத்திக்கு காரணமாவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இவற்றை தவிர்க்க, வீடுகளில் உள்ள பயன்பாடற்ற சோபா, படுக்கைகள், துணிகள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே வந்து பெறும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சனிக்கிழமை தோறும் வீடுகளுக்கே சென்று, பயன்பாடற்ற பொருட்களை மாநகராட்சி சேகரிக்க உள்ளது. இதற்கு, '1913' என்ற எண் மற்றும் 94450 61913 என்ற 'வாட்ஸாப்' எண் மற்றும் நம்ம சென்னை செயலியில், முகவரியுடன் பதிவு செய்யலாம். அதன்படி, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சனிக்கிழமைகளில், பழைய பொருட்களை சேகரித்து கொள்வர். சேகரிக்கப்படும் பொருட்கள் மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் எரியூட்டப்படும். இதன் வாயிலாக, தேவையில்லாத பொருட்கள் சாலையில் தேங்குவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ