உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை; பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை; பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

பெருங்குடி மண்டல எல்லைக்கு உட்பட்ட மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் உள்ளனர். நுாற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்படுகின்றன.அவை, போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலைகளில் சுற்றி திரிவதாக, ஏராளமான புகார்கள் சென்றன.சாலையில் மாடுகளை திரியவிட்டால், மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது.ஆனால், அந்த எச்சரிக்கையை கால்நடை வளர்ப்போர் கண்டுகொள்ளவே இல்லை.கடந்த ஆண்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி பகுதியில், சிறுமியை மாடு முட்டி புரட்டி எடுத்தது. அதை தொடர்ந்து, நங்கநல்லுார் பகுதியில், மாடு முட்டி இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.பழவந்தாங்கலை சேர்ந்த கண்ணன் என்பவர், மாடு முட்டி வயிறு கிழிந்து சிகிச்சை பெற்றார். திருவல்லிக்கேணியில் மாடு முட்டி, டி.பி.கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் பலியானார். மேலும், மூவர் காயமடைந்தனர்.அதேபோல, நங்கநல்லுார், எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலையை சேர்ந்த சந்திரசேகர், மாடு முட்டி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து, மாடுகளை சாலையில் திரியவிட்டால், முதல் முறை 5,000, இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. பின், சில நாட்கள் மட்டுமே நடவடிக்கை எடுத்தது.பின், வழக்கம்போல கண்டுகொள்ளாமல் விட்டதால், மீண்டும் மாடுகள் சாலையில் உலா வந்து, அங்கேயே தஞ்சமடைகின்றன.வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில், கைவேலி, பாலாஜி நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சாலையில் தஞ்சமடைந்து வருகின்றன.அவற்றால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.மீண்டும் ஒரு உயிரிழப்பு நிகழும் முன், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். - -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saai Sundharamurthy AVK
மே 31, 2025 21:47

தமிழக அரசு ஊருக்கு வெளியில் பல ஏக்கர் பரப்பில் மாட்டு இல்லம் என்று ஒன்றை ஆரம்பித்து தெருவில் திரியும் மாடுகளை பிடித்து அங்கு கொண்டு போய் சேர்த்து தீனி போட்டு அரசுடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த மாடு வளர்ப்பவர்களையே ஒரு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் அப்படி தான் செய்கிறார்கள். ஒரு மாடு கூட தெருவில் இருக்காது.


SUBRAMANIAN P
மே 31, 2025 17:54

எங்க ஏரியா நங்கநல்லூருக்கு வந்து பாருங்க. ஆயிரக்கணக்கான மாடுகள் ரோட்டிலேயே அலையும். மனிதர்களைவிட மாடுகள்தான் இங்கு அதிகம்.. மாநகராட்சி வேலை செய்வதில்லை. தெண்ட சம்பளம் வாங்குகிறார்கள். அபராதம் எல்லாம் போதாது... மாடுகளை ரோட்டில் திரியவிடும் மாடு உரிமையாளர்களை ரோட்டில் படுக்கவைத்து விட்டு ஏத்தினால் சரியாக இருக்கும்..


சமீபத்திய செய்தி