வில்லிவாக்கம், சென்னை, அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. மத்திய அரசின் ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.இந்த சாலையைக் கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை, குறைந்தபட்சம் கூட பராமரிக்காமல், ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது.குண்டும், குழியுமான இச்சாலையை ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி, புதிய சாலை அமைக்காமல் அலட்சியமாக இருந்தது. இந்த சாலை குறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டிய பின், கடந்த ஆண்டு ஆக., 5ம் தேதி, ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் பின் புதிய சாலை அமைக்கும் பணிகளை, ரயில்வே துவங்கியது. அங்கு ஒரு பகுதியில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. அதை முழுமையாக முடிக்காமல், அரைகுறையாக விடப்பட்டுள்ளது. அரைகுறை பணிகளால், அவ்வழியாக செல்லும் பயணியர் மற்றும் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். அதுமட்டுமின்றி, பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாதி சாலையும், தற்போது பெயர்ந்து ஜல்லி சிதறிக் கிடக்கிறது.அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:'தினமலர்' நாளிதழில் பல முறை சுட்டிக்காட்டிய பின், பல கோடி ரூபாய் செலவில் குறிப்பிட்ட துாரம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அவை பாதியிலேயே விடப்பட்டதால், தற்போது சாலை முழுதும் பெயர்ந்துள்ளது. கண்துடைப்பிற்கு அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வு செய்துவிட்டுச் செல்கின்றனர்.இதற்கிடையில், லேசான மழை பெய்தாலே, சாலை முழுதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. ஆனால் இதில் நடவடிக்கை எடுக்காமல், ரயில்வே மற்றும் மாநகராட்சி துறைகள் மாறி மாறி கைகாட்டி வருகின்றன.இரு துறைகளும் இணைந்து, இங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.