புதுமாப்பிள்ளையை படுகொலை செய்த கும்பல் தேடி வந்தவர் கிடைக்காத ஆத்திரத்தில் வெறி
கடம்பத்துார் : ரவுடியை தீர்த்துக்கட்ட வந்த கும்பல் அவர் சிக்காத ஆத்திரத்தில், அவருடன் வந்த புதுமாப்பிள்ளையை நாட்டு வெடிகுண்டு வீசியும் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது, பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரை சேர்ந்தவர் ராஜ்கமல், 20; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், மூன்று மாதங்களுக்கு முன், வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷினி, 20, என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கடம்பத்துார் அடுத்த அகரம் பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடம்பத்துார் சென்று விட்டு, 'யமஹா ரே' ஸ்கூட்டரில் நண்பர் தீபன் என்பவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, பல்சர் மற்றும் கே.டி.எம்., பைக்கில் பின்தொடர்ந்து வந்த ஆறு பேர் கும்பல், கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ராஜ்கமல் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது. சுதாரித்த ராஜ்கமல், கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்றார். பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், வைசாலி நகர் பகுதியில், மீண்டும் நாட்டு வெடிகுண்டு வீசியது. இதில், வாகனத்தில் இருந்து ராஜ்கமல், தீபன் ஆகியோர் கீழே விழுந்தனர்; அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், விடாமல் துரத்தி சென்ற மர்ம கும்பல், ராஜ்கமலை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியது. இதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீபன் தப்பிச் சென்றார். தகவலறிந்த கடம்பத்துார் போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சுனால் மற்றும் சாது தரப்பினரிடையே, 'யார் டான்' என, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், கடந்த சில மாதங்களாக சுனால் தலைமறைவாக உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாது தரப்பினர், சுனாலின் கூட்டாளியான தீபனை தீர்த்துக்கட்ட வந்துள்ளனர். இதில், தீபன் தப்பியோடவே ராஜ்கமலை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக, சாது, 28, பவர், 30, லியோன், 27 மற்றும் ராஜ்கமல் நண்பர் தீபன் ஆகிய நான்கு பேரிடம், கடம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.