தென் சென்னைக்கு மாறும் கலெக்டர் அலுவலகம் கிண்டியில் 3.54 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அரசு
சென்னை:இடநெருக்கடி, போக்கு வரத்து நெரிசலால் பாரி முனையில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகம் திணறி வரும் நிலையில், கிண்டிக்கு இடம் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.54 ஏக்கர் இடத்தை ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பிற மாவட்டங்களை போல் ஒருங்கிணைந்த அலுவலகமாக இல்லை. நிர்வாக நலன் கருதி மாநகராட்சி, குடிநீர் வாரியம் என, தனித்தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதேநேரம், முக்கிய அரசு அனுமதி, வருவாய் சான்றிதழ், உதவித்தொகை, நீர்நிலைகள் பாதுகாப்பு, சொத்து நிர்வாகம், அரசு நிலம் குத்தகை, தேர்தல், சமூக நலன், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகள், சென்னை கலெக்டர் அலுவலகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 1791ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மூன்று லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2011ல் 46.46 லட்சமாக உயர்ந்தது. தற்போது, ஒரு கோடியை தாண்டியுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செ ங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள், செ ன்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மாநகராட்சியில் இணைந்த இந்த பகுதிகள் நான்கு ஆண்டுகளுக்குமுன், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதனால், 178 சதுர கி.மீ., ஆக இருந்த சென்னை மாவட்ட பரப்பளவு, 426 கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது. சென்னை கலெக்டர் அலுவலகம், எழிலகம் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த 1997ம் ஆண்டு முதல் பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கட்டடத்தில், நீதிமன்றம் உள்ளிட்ட இதர துறைகளும் உள்ளன. இதனால், இடநெருக்கடி ஏற்படுவதுடன், போராட்டங்களின்போது, போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்தில், நீதிமன்ற அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தை, கிண்டி, வெங்கடாபுரத்தில் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வெங்கடாபுரம் கிராமத்தில், 3.54 ஏக்கர் இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதில், இதர மாவட்டங்களை போல், கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரியின் முகாம் அலுவலகம் அமைய உள்ளது. மேலும், கலெக்டரின் கீழ் செயல்படும் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பிரிவு அலுவலகங்களுடன் ஒருங்கிணைந்த கட்டடமாக கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை மாவட்டம் வருவாய் கோட்டங்கள் 3 தாலுகா அலுவலகங்கள் 16 வருவாய் கிராமங்கள் 122 லோக்சபா தொகுதிகள் 3 சட்டசபை தொகுதிகள் 16 மாநகராட்சி வார்டுகள் 200