வரத்து கால்வாயில் மீண்டும் அடைப்பு மழை கிடைத்தும் நிரம்பாத கோவில் குளம்
திருவொற்றியூர்: பரவலாக மழை பெய்தும், வரத்து கால்வாயில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, கோவில் குளம் நிரம்பாமல் உள்ளது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு வெளியே 2.4 ஏக்கர் பரப்பளவில், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆதிசேஷ தீர்த்த குளம் உள்ளது. குளத்திற்கு வரும் மழைநீர் வடிகால் பாதையில் அடைப்பும், துார்ந்தும் போயிருப்பதால் மழைநீர் குளத்திற்கு வருவதில் சிக்கல் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், இது குறித்த புகாரையடுத்து துார்ந்து போன மழைநீர் வடிகால் சீரமைக்கப்பட்டு, கோவில் குளத்திற்கு மழைநீர் வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, குளத்திற்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது சன்னதி தெருவின் இரு துளைகள் வழியாக மட்டுமே குளத்திற்கு மழைநீர் வருவதாகவும், வடக்கு மாடவீதியில் உள்ள வடிகால்கள் வழியாக மழைநீர் வருவதில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, தொடர் கனமழை இருந்தும், குளத்திற்கு மழைநீர் வரத்து இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மழைநீர் வடிகால் பாதையை சரி செய்து, குளத்திற்கு மழைநீர் வருவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.