உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்

மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்

சென்னை சென்னை மாநகராட்சியில், 2025 - 26ம் நிதியாண்டுக்கு, 8,404.70 கோடி ரூபாய் மதிப்பில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 62 புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.இந்த பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.மாநகராட்சி பட்ஜெட் மற்றும் அறிவிப்புகளை, கவுன்சிலர்கள் பலர் வரவேற்று பேசினர். மேலும், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். துணை மேயர், மண்டல தலைவர்களுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், ''பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேபோல், வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு அணிவது கட்டாயம் என்பதை கொண்டு வரும் மாநகராட்சியின் முடிவை வரவேற்கிறோம்,'' என்றார்.வி.சி., கவுன்சிலர் கோபிநாத் பேசுகையில், ''தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில், பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இப்பணி, மேல்தட்டு மக்களோ, அக்ரஹாரத்தில் இருப்போரோ செய்ய முடியாத பணியாகும்,'' என்றார்.உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசுகையில், ''தனிப்பட்ட தாக்குதல் கூடாது; நானும் பேசுவேன். அக்ரஹாரத்தை பார்த்து வயிற்று எரிச்சல் ஏற்பட்டால், ஜெலுசில் சாப்பிடுங்கள்,'' என்றார்.ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன் பேசுகையில், ''நீங்கள் எங்களை பார்த்து காலனி என, அழைப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அக்ரஹாரம் என அழைப்பதை நிறுத்துகிறோம்,'' என்றார்.இதனால், சிறிது நேரம், சலசலப்பு ஏற்பட்டது.பின், ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன் பேசியதாவது:கொடுங்கையூரில் புதிதாக எரிஉலை வர உள்ளதாக தகவல் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்துள்ளோம். ஆமதாபாத், ராஜ்கோட் பகுதிகளில் அமைக்கப்பட்ட எரிஉலையில் அங்குள்ள மக்கள், காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொடுங்கையூரில் அமைத்து, ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு அமைத்தால், ஸ்டெர்லைட் கதைபோல் ஆகிவிடக்கூடாது. மேலும், மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகளையும் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மேயர் பிரியா அளித்த பதில்:கல்லுாரி கட்டுவதற்கு மாநகராட்சி நிதியில் வாய்ப்பு இல்லை. அதற்காக மாநகராட்சி முயற்சித்து வருகிறது. கொடுங்கையூர் எரிஉலை ஆலை தொடர்பாக, பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். கமிஷனர் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசியதாவது:சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த வரவு, செலவு கணக்கிலும், எங்களுக்கு அளிக்கப்பட்ட தெளிவான குறிப்பிலும் மாறுப்பட்ட தொகை வருகிறது. எனவே, மாநகராட்சி வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும்.அதேபோல், குறைந்த வட்டி செலுத்தும் வகையில், கடன் வாங்க வேண்டும். கடந்தாண்டு, 60,000 ரூபாய் மதிப்பில், பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும் என்றனர். இந்தாண்டில், 84,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓராண்டிற்குள், 24,000 ரூபாய் எப்படி உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு மேயர் பிரியா கூறுகையில், ''வரவு, செலவு கணக்கை, மத்திய அரசு நிதி ஆதாரம் இல்லாமல், தாக்கல் செய்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சி திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு, வரும் மார்ச் 31க்குள், 350 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ''நிதியமைச்சர் சென்னை வந்து நடத்தும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கான நிதியை கேட்டு வாங்கி தாருங்கள்,'' என்றார்.

கேள்வியும் அவரே பதிலும் அவரே!

துணை மேயர் மகேஷ்குமார் தன் இருக்கையில் இருந்தபோது, ''மாநகராட்சி வார்டுகளின் பராமரிப்பு நிதி எப்போது விடுவிக்கப்படும். விரைந்து விடுவிக்க வேண்டும்,'' என்றார்.சில மணி நேரத்திற்கு பின், மேயர் அவரது இருக்கையில் இருந்து எழுந்து சென்றபின், கூட்டத்தை துணை மேயர் மகேஷ்குமார் நடத்தினார். அப்போது, கவுன்சிலர் ஒருவர் வார்டு பராமரிப்பு நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு, துணை மேயர் மகேஷ்குமார் பதில் அளிக்கையில், ''வார்டு பராமரிப்பு நிதியான, 10 லட்சம் ரூபாய், வரும் 1ம் தேதி முதல் விடுவிக்கப்படும்,'' என்றார்.

கவுன்சிலர்கள் ஆப்சென்ட்!

நேற்றைய கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. மேலும், வந்தவர்கள் அவ்வப்போது இருக்கையில் அமரவில்லை. குறிப்பாக, மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், தங்கள் பேசும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே, கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். வந்தப்பின் இருக்கையை விட்டு அடிக்கடி வெளியே செல்லக்கூடாது என, மேயர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அவரது பேச்சை கவுன்சிலர்கள் யாரும் மதிக்காமல், தங்கள் விருப்பம்போல் நடந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள்:* கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணாபுரம், 1வது தெருவிற்கு, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது* அண்ணா நகர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில், 7.6 கி.மீ., நீளத்திற்கு, 33.66 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது* புரசைவாக்கத்தில் மாற்று திறனாளிகளுக்கான மறு வாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது* சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம், ராஜிவ்காந்தி சாலையில், 9.90 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதிக்கப்படுகிறது.* சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு, 1,000 கிலோவுக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் செலுத்தியப்பின் விடுவிக்கப்படும்.இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhakt
மார் 22, 2025 22:39

சென்னையும் சுற்று வட்டாரமும் நாரி போச்சு


Vasu
மார் 22, 2025 07:55

தூய்மைப் பணியாளர்களை வேறு தொழில் செய்ய பயுற்சிக் கொடுத்து அவர்கள் வாழ்வை மேம்பட கேட்காமல் பணி நிரந்தரம் கேட்பதே தவறு. தூய்மை பணியை இயந்திரமயமாக்குங்கள். காலனி என்பதோ, அக்ரஹாரம் என்பதோ ஏற்றத்தாழ்வு கிடையாது. காலனிகளை அப்படியே ஆண்டாண்டுகாலமாக முன்னேறாமல் வைத்திருப்பது அரசியல்தானே? எல்லாருக்கும் திறமைப் பயிற்சி அளித்து முன்னேறி எங்கு வேண்டுமானாலும் அவர்கள் வாழ்விடம் அமையட்டும். பிரிவினைப் பேச்சை எல்லா இடங்களிலும், எப்போதும் பேசாதீர்கள்


visu
மார் 22, 2025 21:14

பிற நாடுகளில் குப்பை போடுவதை கட்டுப்படுத்துகிறார்கள் குப்பையை சேகரிப்பதை அல்ல . நாம் குப்பையை போட்டுவிட்டு அதை சுத்தம் செய்து கொண்டுள்ளோம் அது சரி மத்திய அரசு மும்மொழி என்றால் சொன்னதும் செய்து விடீர்களா ? எதிரிகிறீர்கள் அல்லவா ? அனால் வரி உயர்வு என்றால் மட்டும் எதிர்க்காமல் மத்திய அரசு மேல் பழி போடுகிறீர்கள் எதிர்க்க வேண்டியதுதானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை