உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்

தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, தேசிய அளவிலான, 'டிராக் சைக்கிளிங்' சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நாளை துவங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனமும் இணைந்து, 76வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியை, நாளை துவங்கி, 19ம் தேதி வரை நடத்துகிறது.தமிழகத்தில் முதல் முறையாக நடக்கும் இப்போட்டிகள், செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில் நடக்கிறது. இதில், சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் நடக்கிறது.இதுகுறித்து, விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலளர் அதுல்யா மிஸ்ரா கூறியதாவது :சென்னையில் முதல் முறையாக, 76வது தேசிய டிராக் சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம், 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசத்தில் இருந்து, 700 சைக்கிள் வீரர்கள் பங்கேற்கின்றனர். காலை, 6:30 முதல் மாலை 6:30 மணி வரை போட்டிகள் நடத்தப்படும்.தமிழகத்தை சேர்ந்த, 41 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். போட்டியை, 1,500 பேர் வரை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் போட்டியை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். இந்திய சைக்கிள் கூட்டமைப்பு பொது செயலர் மணிந்தர் சிங் பேசுகையில், ''விளையாட்டு துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது, முதல் முறையாக, 'டிராக் சைக்கிள்' போட்டி தமிழகத்தில் நடக்கிறது; இது, இந்தியாவில் நடக்கும் பெரிய சைக்கிள் போட்டியாக இருக்கும்,'' என்றார். இறுதியாக, போட்டிக்கான 'ஜெசி' அறிமுகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி