உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு விழித்தது மாநகராட்சி அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு விழித்தது மாநகராட்சி அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

சென்னை, சென்னை மாநகரம் முழுதும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால், நடக்கக்கூட வழியின்றி பாதாசாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை ஆக்கிரமிப்பை வேடிக்கை பார்த்து வந்த மாநகராட்சி, திடீரென விழிப்படைந்து, நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பகுதி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், 'நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் - 2014'ன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சாலையோரம் வியாபாரம் செய்து கொள்ளலாம். ஆனால், தள்ளுவண்டியில் மட்டுமே பொருட்களை வைத்து விற்க வேண்டும்; ஒரே இடத்தல் நிரந்தரமாக கடை அமைத்து இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதரத்திற்கான கடைகள் மட்டுமே, ஒரே இடத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியும். அதன்படி, சென்னை மாநகராட்சியில் மட்டும், 35,558 அனுமதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். ஆனால், மாநகராட்சி எல்லையில் அனுமதியின்றி, நடைபாதைகளை ஆக்கிரமித்து பலரும் இஷ்டம்போல், 'பக்கா'வாக கடைகள் அமைத்துள்ளனர். பாதசாரிகளை பற்றி எல்லாம் எந்த கவலையும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இல்லை. உள்ளூர் கவுன்சிலர்கள் முதல் வட்ட செயலர்கள் வரை தங்கள் நிலைக்கேற்ப, ஏரியாக்களை வளைத்துக் கொண்டு, 'கல்லா' கட்ட துவங்கினர். ஒரு கடைக்கு, மாதம், 2,000 ரூபாய் என துவங்கி, ஏரியாக்களுக்கு ஏற்ப, 10,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்க ஆரம்பித்தனர். இது நல்ல வருவாய் கிடைக்க வழி வகுத்ததால், சென்னை முழுதும் ஆளுங்கட்சியினர், தனி தொழிலாக மாற்றிவிட்டனர். இதன் விளைவு, எல்லா பகுதிகளிலும் திடீர் திடீரென, விதவிதமான பெயர்களில் நடைபாதை கடைகள் புற்றீசலாக உருவாகின. இவற்றால், சென்னையின் நெருக்கடிக்கு மேலும் துாபம் போடுவதாக அமைந்துவிட்டது. பல இடங்களில் வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. மாதம் தோறும் சரியாக ஆளுங்கட்சி பிரமுகர்கள் 'கப்பம்' கட்டுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், கண்டும், காணாமல் இருந்து வந்தனர். இது, பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது; விபத்துகளுக்கும் வழிவகுத்தது. இதனால், மாநகராட்சியையும், போலீசாரையும் பலரும் திட்டத் தீர்த்தனர். இது, அரசுக்கும் கெட்ட பெயராக மாறிவந்தது. நிலைமை சிக்கலாவதை உணர்ந்த மாநகராட்சி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென விழப்படைந்துள்ளது. நடைபாதையை ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைளையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கதுதான். அதே நேரம், இது அறிவிப்போடு நிற்காமல், உண்மையிலேயே நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதாக அமைய வேண்டும்; மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னை மாநகர மக்களின் விருப்பம். அரசியல் தலையீடு இருக்காது இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில், அரசியல்வாதிகள் மற்றும் கவுன்சிலர்கள் தலையிட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மண்டல அளவில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். முதல்வர், அமைச்சர் உத்தரவில் அகற்றப்படுவதால், இடையூறு ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தலையீடு இருக்காது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வழிமுறைகள் என்ன? * உதவி பொறியாளர்கள், அனுமதிக்கப்பட்ட விற்பனை பகுதிகள் தவிர, மற்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து, அந்த பட்டியலை மண்டல அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் * மாநகராட்சி செயலியில், ஆக்கிரமிப்பு கடை இருப்பிடத்துடன், புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும் * அடையாளம் காணப்பட்ட அடுத்த நாளில், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால், போலீசாரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின், முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை மாநகராட்சி செயலியில் பதிவேற்ற வேண்டும் * ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான தினசரி அறிக்கையை, வடக்கு வட்டார துணை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசார் மீது என்ன நடவடிக்கை? சென்னையில் பல இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு போலீசார் உடந்தையாக இருந்து வருகின்றனர். மாதம் தோறும் கப்பம் கிடைப்பதே இதற்கு காரணம். தற்போது, மீண்டும் ஆக்கிரமிப்பு வந்தால், போலீஸ் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது மாநகராட்சி. ஆனால், போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துவிட்டால் நடவடிக்கை எடுப்பது சிரமமாகிவிடும். போலீசார் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வி எழுகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ