உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் 8 மணி நேர மின் தடையால் மக்கள் அவதி; துாக்கம் போச்சு! அடுத்தடுத்து பழுதான கேபிளால் சப்ளை பாதிப்பு

இரவில் 8 மணி நேர மின் தடையால் மக்கள் அவதி; துாக்கம் போச்சு! அடுத்தடுத்து பழுதான கேபிளால் சப்ளை பாதிப்பு

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாக, விடிய விடிய மின் தடை ஏற்பட்டது. இதனால், புழுக்கத்தால் துாங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.சென்னையில் புதை மின் வடம் வாயிலாகவும், மின் கம்பம் மேல் செல்லும் கம்பிகள் வாயிலாகவும், மின் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், இரவில் வெப்பக் காற்று, புழுக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வீடுகளில், 'ஏசி' சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், மின் சாதனங்களில், 'ஓவர்லோடு' காரணமாக பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, கோயம்பேடு - நெற்குன்றம் சாலையில் உள்ள 33 கே.வி., மின் கேபிளில் பழுது ஏற்பட்டது.இதனால், மதுரவாயல், கோயம்பேடு, ஜெ.ஜெ., நகர், ஆலப்பாக்கம், மேட்டுக்குப்பம், எம்.எம்.டி.ஏ., காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளும், மின் தடையால் கும்மிருட்டாகின. இரவு முழுதும் கொசுக்கடியிலும், துாக்கமின்றியும் மக்கள் தவித்தனர். மேலும் மின் மோட்டார்கள் இயக்க முடியததால், அவசர தேவைகளுக்கு தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகினர்.மின் தடை குறித்து கேட்க, பகுதிவாசிகள் மின் வாரிய பொறியாளருக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், இணைப்பை ஏற்காததால் ஆத்திரமடைந்த மக்கள், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால், நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது, உயர் அழுத்த மின் வடத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

மின் வாரியம் விளக்கம்

இது குறித்து, மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரவாயல் மற்றும் ஆலப்பாக்கத்தில், 11ம் தேதி நள்ளிரவு, 33 கிலோ வோல்ட் கேபிளில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுதுகளால், மின்சாரம் பாதிக்கப்பட்டது.அந்த பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் மின் கேபிள்கள் சரிசெய்யப்பட்டு, 12ம் தேதி காலை 8:50 மணி முதல் மின் வினியோகம் படிப்படியாக சீராகி, மதுரவாயல் பகுதிக்கு காலை 10:30 மணி முதல் 100 சதவீதம் வழங்கப்பட்டது.கோயம்பேடு - மதுரவாயல், 33 கிலோ வோல்ட் மின் வழித்தடத்தில், 11ம் தேதி இரவு, கேபிள் பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டது.எனவே, ஜெ.ஜெ., நகர் - மதுரவாயல் வழித்தடம் வாயிலாக, ஒரு சில பகுதிகளுக்கு மின் வினியோகம் மாற்றி வழங்கப்பட்டது.மீதமுள்ள பகுதிகளுக்கு, காரம்பாக்கம் துணை மின் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் துணை மின் நிலையம் வாயிலாக, மின் வினியோகம் மாற்றி வழங்கப்பட்டது.ஜெ.ஜெ., நகர் வழித்தடத்தில், 12ம் தேதி அதிகாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பழுதால், மின்சாரம் தடைபட்டது.சின்மயா நகர் - மதுரவாயல் பீடரின் பழுது சரிசெய்யப்பட்டு, சோதனை செய்யும்போது மீண்டும் பழுதானதால், தானாகவே மின்சாரம் தடைபட்டது.இதற்கிடையில், சின்மயா நகர் - மதுரவாயல் வழித்தடத்தில், தரைக்கு அடியில் பழுதான இடம் கண்டறியப்பட்டு, அது விரைந்து சரிசெய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.மின் வினியோகம் வழங்கும் பணியை, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், 24 மணி நேரமும் கண்காணித்து வரும் சென்னை மின் வினியோக கட்டுப்பாட்டு அறையில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்வெட்டால், துாங்க முடியாமல் குழந்தைகளுடன் விடிய விடிய சாலையில் இருந்தோம். அடுத்த நாள் காலையிலும், மின் வினியோகம் வழங்கப்படாததால் மின் மோட்டார் போட முடியவில்லை. இதனால் அவசர உபாதைகள் கழிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டோம்.-- எம்.மகேஷ், 45; எம்.எம்.டி.ஏ., காலனி.நேற்று முன்தினம் காலையில் இருந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 10:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டு நள்ளிரவு 1:00 மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சில நிமிடங்களில் மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் இரவு முழுதும் மொட்டை மாடி மற்றும் சாலையில் தஞ்சம் புகுந்தோம்.- -- ஏ.பாரத், -42, மதுரவாயல்.சேலையூர் அடுத்த சந்தோஷபுரம் பகுதியில், சமீபகாலமாக இரவு மற்றும் பகலில் மின்தடை ஏற்படுவது அதிகரித்துவிட்டது. கவுரிவாக்கம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு போன் செய்தால் முறையான பதில் இல்லை. மின் நுகர்வோர் சிறப்பு முகாமில் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.- ஜி.தினகரன், 43,சமூக ஆர்வலர், சந்தோஷபுரம்.பெருங்களத்துார் காமராஜர் நெடுஞ்சாலை, திருவள்ளுர் தெரு, கிருஷ்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு மூன்று, நான்கு முறை போன் செய்த பிறகு எடுத்த அதிகாரி, 110 துணை மின் நிலையத்தில் பழுதாகிவிட்டது. அதன்பிறகு, இரவு 12:30 மணிக்கு சப்ளை வந்தது.- பி.மகேந்திர பூபதி, 51,தலைவர்,பெருங்களத்துார்- பீர்க்கன்காரணை குடியிருப்போர் சங்கம்.கோடை வெயிலை போல மின் தடையும் ஆரம்பித்து விட்டது. பொது தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ - மாணவியர் படிக்கவும் முடியாமல் துாங்கவும் முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.-- வே.பிந்து, 41, லட்சுமிபுரம்.

நள்ளிரவில் அடிக்கடி மின்தடை

திருவொற்றியூர்திருவொற்றியூரில் இரு தினங்களாக, நள்ளிரவு 11:00 மணி முதல் அதிகாலை வரை, சில நிமிடங்கள் இடைவெளி விட்டு, மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மாடிக்கும், வீட்டிற்கு பாய் - தலையணையுடன் அலைந்தபடியாக துாக்கமிழந்து தவிக்கின்றனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், ''வெயில் காலம் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்கும். அதை தாக்குபிடிக்கும் வகையில் மின்மாற்றி இருப்பதில்லை. இதன் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும், உடனடியாக சரி செய்து மின் வினியோகம் செய்யப்படுகிறது,'' என்றார்.புழல்புழல், மாதவரம், புத்தகரம் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு 9:00 மணிக்கு மேல் குறைந்த மின் அழுத்தத்தால் பாதிப்பு மற்றும் மின் வினியோகம் தடைபடுகிறது. மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பராமரிப்பு பணிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பழுதான டிரான்ஸ்பார்மர்கள் சரி செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் பழுதான மின்கேபிள்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை கண்டறிந்து சரி செய்து வருகிறோம்' என்றனர்.புறநகரில் பரிதவிப்புசென்னை புறநகர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம், விசாலாட்சி நகர் 2வது தெருவில், இரு தினங்களுக்கு முன் இரவு 11:30 மணிக்கு, மின்வெட்டு ஏற்பட்டது.இப்பகுதிக்கு மாடம்பாக்கம், செம்பாக்கம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பகுதிக்கான மின் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டோர், அப்பகுதியில் உள்ள மின் அலுவலகத்திற்கு புகார் அளிக்க நேராக சென்றுள்ளனர். அலுவலகத்தில் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். புகார் எண்ணை தொடர்பு கொண்டபோதும் உரிய நடவடிக்கை இல்லை.மறுநாள் காலை, 7:30 மணிக்கு பழுது சரிசெய்யப்பட்ட பின்னரே, அந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல, புறநகர் பகுதிகளில் இதுபோல் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஏப் 13, 2025 08:52

தேர்தல் யாருக்கும் இப்படி நடை பேர்வது வாடிக்கை தான் இவர் ஆட்சில் இருந்தால் அவர் ஆளுக்கு இருட்டு அடிப்பு செய்வானுக அவர் ஆட்சில் இவங்க செய்வானுக அம்புட்டு தான் விஷயம் பொன்னாவார்டும் இப்படி இருந்தச்சொல்லு பார்க்கலாம் இருக்காது


Vasan
ஏப் 13, 2025 08:19

Why domestic people are only punished through out Tamilnadu? Factories are given full supply and even more than their approved quota. Excess consumption by factories causes problem for domestic people. Both are important. Without factories, there is no living for domestic people.


Kalyanaraman
ஏப் 13, 2025 07:37

நிர்வாகம் எவ்வளவு சீர் கெட்டாலும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை, ஓட்டு போட வராமல் இருக்கும் 40 சதவீதம் மக்கள் இருக்கும் வரை, இவர்கள் வெற்றிக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆதலால் இந்த அவல நிலை தொடரும்.


karmanews
ஏப் 13, 2025 03:40

all the cables are bought for replacement and returned to same company. if you check the records all the cables are or fixed every five years. but they are not fixing it they are keeping the old cable and transformers and lights everything as is it. but in records its mentioned they are already has been fixed. There is no tem to validate this fraud happening in the electicity board.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை