ரூ.25 கோடியில் அமைத்த பூங்கா பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
சென்னை, சென்னையை அழகுபடுத்தும் வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மேம்பால பூங்கா மற்றும் 1.29 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், உரிய பராமரிப்பின்றி வீணாகியுள்ளன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சென்னை மாநகராட்சியில் 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தில், மாநகரை அழகுபடுத்தும் பணிகள் துவங்கின.அதன்படி, 25 கோடி ரூபாய் மதிப்பில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட மேம்பாலங்களில், வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.மேலும், பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை, சக்கரபாணி தெரு, காமாட்சி மருத்துவமனை, வடக்கு உஸ்மான் உள்ளிட்ட மேம்பாலங்களும் அழகுபடுத்தப்பட்டன.அதேபோல், அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில், 1.29 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.தற்போது, மாநகராட்சியால் அமைக்கப்பட்ட மேம்பால பூங்கா, செயற்கை நீரூற்றுகள், போதிய பராமரிப்பு இல்லாததால், குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான செயற்கை நீரூற்றுகளில், பாசி படர்ந்த நிலையில் தண்ணீர் காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:இந்த மேம்பால பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று பராமரிப்பு, மண்டல அளவில் தனியாரிடம் குறுகிய கால பராமரிப்பிற்கு விடப்பட்டது. ஆனால், பெரும்பாலான தனியார் ஒப்பந்ததாரர்கள் பராமரிக்காததால் சீரழிந்துள்ளது.பராமரிப்பு இல்லாத மேம்பால பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.தற்போது மண்டல அளவில் உள்ள பராமரிப்பு பணியை, மாநகராட்சியே நேரடியாக எடுத்து கொண்டு, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விட உள்ளது.இதனால், தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். மழைக்காலம் முடிந்த பின், மேம்பால பூங்காக்கள் சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.