குறைக்கப்பட்ட 54சி பேருந்து 10 ஆண்டாக பகுதிவாசிகள் அவதி
ஆவடி, பட்டாபிராம் சி.டி.எச்.சாலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக ரயில்வே மேம்பால பணி நடந்து வந்தது. இதன் காரணமாக, ஆவடி வழியாக திருவள்ளூர், பெரியபாளையம், பாக்கம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் பட்டாபிராம், தண்டுரை வழியாக இயக்கப்பட்டன. இதன் வாயிலாக தண்டுரை, பள்ளத்தெரு, அணைகட்டுச்சேரி, அமுதுார்மேடு மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதிவாசிகள் பயனடைந்தனர்.பட்டாபிராம் மேம்பாலத்தில் ஒருவழிப்பாதை, கடந்த 25ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.அதன் பின், தண்டுரை வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள், புது மேம்பாலம் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், மேற்கூறிய பகுதிவாசிகள் போதுமான பேருந்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். தற்போது, பட்டாபிராம் தண்டுரை வழியாக தடம் எண்: '54சி' அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நாள் ஒன்றுக்கு 2 பேருந்து, 18 நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த வழித்தடத்தில், 6 பேருந்து, 24 நடைகள் இயக்கப்பட்டது.கொரோனாவிற்கு பின், 4 பேருந்துகள் குறைக்கப்பட்டு, வெறும் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பேருந்திற்காக வெகு நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், 2 கி.மீ., துாரம் செல்வதற்கு 20 ரூபாய் வசூலித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி பேருந்து பணிமனை அதிகாரிகள், மேற்கூறிய வழித்தடத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட 4 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோல், ஆவடியில் இருந்து தண்டுரை வழியாக பூந்தமல்லிக்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1970ல், பூந்தமல்லியில் இருந்து பட்டாபிராம் வழியாக அன்னம்பேடு கிராமத்திற்கு தடம் எண்: '54சி' பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்து, நாள் ஒன்றுக்கு 6 நடை இயக்கப்பட்டு, பின் படிப்படியாக சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கருணாகரச்சேரி, அன்னம் மேடு, ஜனகராஜகுப்பம் பகுதிகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.