உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட எந்த தடையும் இல்லை: ஐகோர்ட்

அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட எந்த தடையும் இல்லை: ஐகோர்ட்

சென்னை: 'காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோவிலில், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சென்று வழிபட எந்த தடையும் இல்லை. கோவிலுக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்ற நிலைபாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்' எனவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: புத்தகரம் கிராமத்தில், முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள், கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. தேரோட்டத்தின்போதும், துாரத்தில் இருந்து கூட தரிசனம் செய்ய அனுமதிப்பது இல்லை. அரசின் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், கடந்த 2000ம் ஆண்டு முதல் பட்டியலின மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பது இல்லை. மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. அமைதி பேச்சு நடத்தப்பட்டது. இருப்பினும், மற்ற சமூகத்தினரை அனுமதிப்பது போல, பட்டியலின மக்களை அனுமதிப்பது இல்லை. மற்ற சமூகத்தினருடன் பட்டியலின மக்களையும் தேர் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் எஸ்.குமாரசாமி, டி.பார்வேந்தன், ஆர்.திருமூர்த்தி மற்றும் அறநிலையத்துறை தரப்பில் கே.கார்த்திகேயன் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களுக்கு பின், இந்த மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவு பிறப்பித்தார். அப்போது, 'முத்து கொளக்கியம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல எந்த தடையும் இல்லை. எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்ற அரசின் நிலைபாட்டை உறுதி செய்ய வேண்டும். 'அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்ட தடத்தில், தேர் வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தையும் நடத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத் தார்.

பலத்த பாதுகாப்பு

முத்து கொளக்கியம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல எந்த தடையும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடம் தெரு, பெருமாள் கோவில் தெரு மற்றும் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை