அர்ச்சகரிடம் மோதிரம் திருடிய பலே திருடன் சிறையிலடைப்பு
தாம்பரம்: அர்ச்சகரிடம் மோதிரம் திருடிய பலே திருடனை, போலீசார் சிறையில் அடைத்தனர். தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கணேசன், 52, என்பவர் அர்ச்சகராக உள்ளார். கடந்த ஜூன் 30ம் தேதி, கோவிலுக்கு வந்த நபர், தான் பிரபல நகைக்கடையில் பணிபுரிவதாக கூறி, அர்ச்சனை செய்யுமாறு கூறியுள்ளார். நன்றாக பழகியவர் போல் பேசியதால், அவரது பேச்சை நம்பி தான் கையில் போட்டிருந்த ஒரு சவரன் மோதிரம் வளைந்துள்ளது, அதை சரிசெய்ய முடியுமா எனக் கூறி, கணேசன் கழற்றி கொடுத்துள்ளார். அதை வாங்கி, சரிசெய்வது போல் பார்த்துக்கொண்டிருந்த மர்ம நபர், அர்ச்சகர் உள்ளே சென்றதும், கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவானார். இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது, திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன், 39, என்பது தெரிய வந்தது. இதே பாணியில், திண்டிவனத்தில் மோதிரம் திருடி, தற்போது திண்டிவனம் சிறையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தாம்பரம் போலீசார், முருகனை நேற்று முன்தினம், விசாரணைக்காக காவலில் எடுத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோதிரத்தை மட்டுமே திருடும் பழக்கம் கொண்ட முருகன், 'மோதிர முருகன்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டது தெரியவந்தது. விசாரணை முடிந்து, முருகனை, நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.