ரூ.5.15 கோடியில் திருநீர்மலை ஏரி சீரமைப்பு செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வலியுறுத்தல்
திருநீர்மலை :சீரமைப்பு பணி நடந்து வ ரும் திருநீர்மலை ஏரியில், கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால், அவற்றை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநீர்மலை பெரிய ஏரி, 194.01 ஏக்கர் பரப்பளவு உள்ளது. தொடர் ஆக்கிரமிப்பால், தற்போது 146.94 ஏக்கராக சுருங்கி விட்டது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால், இந்த ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. சீமைக் கருவேல மரங்களால் கரைகள் மூடப்பட்டுள்ளன. ஏரி பகுதிகள், குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. ஏரி முழுதும் ஆகாயத்தாமரை வளர்ந்து மூடி விட்டது. கண்ணெதிரே இந்த ஏரி நாசமடைவதை தடுத்து, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, சட்ட சபையில் வலியுறுத்தியுள்ளார். அதன்பின், 5.15 கோடி ரூபாய் செலவில், இந்த ஏரி சீரமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து, அதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் படி, கரையை சுத்தம் செய்து பலப்படுத்துதல், ஏரியினுள் உள்ள சகதிகளை அகற்றுதல், கலங்கலை புதுப்பித்தல், மதகு கட்டுதல், ஏரியினுள் இரண்டு மண் திட்டுகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக, ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஏரியினுள் ஆங்காங்கே மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. செத்து மிதக்கும் மீன்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, பள்ளம் தோண்டி புதைக்கப்படுகின்றன. ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் முறையாக அகற்றப்படாததால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை ஒட்டியுள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், ஏரியினுள் செத்து மிதக்கும் மீன்களையும், கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆகாயத் தாமரை கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.