திருவல்லிக்கேணி ஆர்.சி., அணி டிவிஷன் கிரிக்கெட் லீக்கில் தோல்வி
சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமான டி.என்.சி.ஏ., சார்பில், டிவிசன் கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.இதில் ஐந்தாவது டிவிஷன் சி மண்டலத்திற்கான போட்டியில் திருவல்லிக்கேணி ஆர்.சி., அணியும் யங்ஸ்டர்ஸ் சி.சி., அணியும் மோதின.இதில், முதலில் பேட் செய்த திருவல்லிக்கேணி ஆர்.சி., அணி, 37.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர் அணியின் வீரர் எலா போர்கோ, 29 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்களை சாய்த்தார். அடுத்து பேட் செய்த, யங்ஸ்டர்ஸ் சி.சி., அணி, 23.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், சிவாஜி சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த, சென்னை மெயின் பி.எஸ்.என்.எல்., அணி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 230 ரன்கள் மட்டுமே எடுத்து, விறுவிறுப்பான போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அணியின் வீரர் ரிதீஷ்வரன், 120 பந்துகளில் மூன்று சிக்சர், 10 பவுண்டரியுடன் 129 ரன்களை அடித்தார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால், அந்த அணி தோல்வியை தழுவியது.அதேபோல, குராவ் சி.சி., 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 181 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய, வேப்பேரி சி.சி., அணி 45.4 ஓவர்களில், ஏழு விக்கெட் இழந்து, 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. குராவ் வீரர் கேசவ் 5 விக்கெட் சாய்த்தார்.