திருமண மண்டபத்தில் நகை திருட முயன்ற மூன்று ஊழியர்கள் கைது
சென்னை, கொளத்துார் ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வினோதினி, 43; அழகு கலை நிபுணர். கடந்த, 7 ம் தேதி ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், மணப்பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்ய சென்றார்.அங்கு, பெண் வீட்டினருக்கு ஒதுக்கப்பட்ட அறையை பூட்டிவிட்டு, இரவு உணவு சாப்பிட சென்றார். சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது, இரண்டு நபர்கள் அறையின் வெளியே நின்றனர்; ஒருவர் அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தார். பெண் வீட்டாரின் உதவியுடன் மூவரையும் பிடித்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுதிர்குமார், 33, சூரஜ், 28, பத்ரி விஷால், 19 ஆகிய மூவரும், திருமண மண்டபத்தில் துப்புரவு வேலை செய்து வருவதும், பெண் வீட்டார் அறையை பூட்டிவிட்டுச் சென்றதை நோட்டமிட்டு, மாற்று சாவியை பயன்படுத்தி அறைக்குள் நகையை திருட முயன்றதும் தெரிய வந்தது. மூவரையும் ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.****