ஒரே நாளில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 25 உயர்வு
கோயம்பேடு: மழை மற்றும் வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 25 ரூபாய் உயர்ந்து, 50 ரூபாய்க்கு விற்பனையானது. கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை, தினமும் 1,300 டன் தக்காளி தேவை உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் கனமழை பெய்ததால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி லாரி வரத்து குறைந்தது. நேற்று கோயம்பேடு சந்தைக்கு, 800 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதையடுத்து, ஒரே நாளில் விலை கிலோவிற்கு 25 ரூபாய் அதிகரித்து, முதல் ரகம் 50 ரூபாய், இரண்டாம் ரகம் 40 ரூபாய், மூன்றாம் ரகம், 30 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனையில், ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல, கிலோ, 30 -- 40 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ், 80 - 90 ரூபாய்க்கு விற்பனையானது.