உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 50 பணிமனைகள் நவீனமயமாக்கம் போக்குவரத்து துறை நடவடிக்கை

50 பணிமனைகள் நவீனமயமாக்கம் போக்குவரத்து துறை நடவடிக்கை

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 50 பணிமனைகளை தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 313 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவற்றில், பஸ்களை பழுது பார்க்கும் பணி நடக்கிறது. பணிமனைகளில், பெரும்பாலும் பழைய கருவிகளே உள்ளன. சிலவற்றில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, பணியாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பணிமனைகளை படிப்படியாக மேம்படுத்த, தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், அதிக பஸ்கள் இயக்கமுள்ள போக்குவரத்து பணிமனைகளை தேர்வு செய்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகம் முழுதும், 50 போக்குவரத்து பணிமனைகளை தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், மேம்படுத்த வேண்டிய பணிமனைகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலோடு, பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பணிமனையும், 1.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளது. பணிமனை கட்டடம் புதுப்பிப்பு, சுற்றுச்சுவர், வடிகால் அமைப்பு மேம்பாடு, எல்.இ.டி., விளக்குகள் பொருத்துதல், நவீன கருவிகள் வாங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை