சென்னை, சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்க யோசனை தெரிவித்துள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது, கழிவுநீர், குப்பை கொட்டப்படுவதால், ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்தது. இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசனும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்குள்ள 955 குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும்.'வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க, வேளச்சேரி ஏரியை மட்டுமல்லாது, சுற்றியுள்ள ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, நாராயணபுரம், பள்ளிக்கரணை ஆகிய ஏரிகளையும், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள ஏரியையும் துார் வாரி ஆழப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்வளத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டுமே உள்ளது. அதை ஆழப்படுத்த தயார்' என தெரிவித்தார்.தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்த, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம்.கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், புதிய நீர்நிலை அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு தன் நிலைப்பாட்டை அறிந்து, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு, பசுமை பூங்காவாக மாற்ற முடிவு செய்துள்ள கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், நீர்நிலையுடன் கூடிய பசுமை பூங்காவை உருவாக்கினால், பெருமழை காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும்.வேளச்சேரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கோயம்பேடு பூங்கா அவசியம்சென்னை மாநகரின் மக்கள் தொகை, 1 கோடியை தாண்டி விட்டது. இந்திய அளவிலும், உலக அளவிலும், இந்த அளவுக்கு மக்கள்தொகை உடைய மாநகரங்களுடன் ஒப்பிடும்போது, சென்னையில் உள்ள பூங்காக்களின் பரப்பு மிகவும் குறைவு. டில்லியில், 880 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 240 ஏக்கரில் லால்பாக் பூங்கா, 100 ஏக்கரில் கப்பன் பூங்கா உள்ளது. சென்னையிலும் இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்படுவது அவசியம். சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேடில் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 66.4 ஏக்கரில் மிகப்பெரிய பூங்காவை, அரசு அமைக்க வேண்டும்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்
பூங்கா பணி விரைந்து துவங்க
தோட்டக்கலை துறை தீவிரம்கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் நிறுவனத்திற்கு 118 ஏக்கர் அரசு நிலம், 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 4,382 கோடி ரூபாய்.குத்தகையை ரத்து செய்து நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. இங்கு பிரமாண்ட பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, தோட்டக்கலைத் துறையிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நிலத்தை திரும்ப பெறுவதற்கான சட்ட நடவடிக்கையில், ரேஸ் கோர்ஸ் கிளப் நிர்வாகம் இறங்கியுள்ளது. எனவே, ரேஸ் கோர்ஸ் கிளப் நிர்வாகத்திற்கு, நிலம் மீண்டும் செல்லாத வகையில், பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து துவங்க, தோட்டக்கலைத் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், பூங்கா அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.ஓரிரு நாட்களில், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று, பூங்கா அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.