உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் குப்பை கொட்டினால் அபராதம் சிறப்பு படை அமைக்க தீர்ப்பாயம் பரிந்துரை

மெரினாவில் குப்பை கொட்டினால் அபராதம் சிறப்பு படை அமைக்க தீர்ப்பாயம் பரிந்துரை

சென்னை, கடற்கரையை துாய்மையாக பராமரிப்பது குறித்து மக்களுக்கு தெரியவில்லை என, வேதனை தெரிவித்துள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், உடனடி அபராதம் விதிக்கும் வகையில், சிறப்பு படை அமைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.கடந்த 16ம் தேதி, காணும் பொங்கலன்று, மெரினா கடற்கரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடினர். இதனால், கடற்கரை முழுதும் குப்பை மேடானது. இது தொடர்பாக ஊடகங்களில், படங்கள், வீடியோக்களுடன் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து நேற்று விசாரித்த தீர்ப்பாயம், இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, காணும் பொங்கலன்று, மெரினா கடற்கரை குப்பை மேடாக காட்சி அளிப்பது குறித்து, கேள்வி எழுப்பியது.அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், 'குப்பை கொட்டுவதை குற்றமாகக் கருதி அபராதம் விதிக்காவிட்டால், இதை தடுக்க முடியாது. படித்தவர், படிக்காதவர் என, எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைவரும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்' என்றார்.அதைத் தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கடற்கரையின் துாய்மையை எப்படி பாதுகாப்பது குறித்து, மக்களுக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது. எனவே, காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கக்கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க இருக்கிறோம். குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில், சிறப்பு படைகளை அமைக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சியும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

45,500 கிலோ குப்பை அகற்றம்

சென்னை மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் 'உர்பேசர் சுமித்' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி அறிவுறுத்தலின்படி, காணும் பொங்கலையொட்டி, கடற்கரைகளில் துாய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரினா கடற்கரையில், 160 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அங்கு, 15,000 கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டது. கோடம்பாக்கம் மண்டல கடற்கரையில், 10,000 கிலோ; அடையாறு மண்டல கடற்கரையில், 12,000 கிலோ; பெருங்குடி மண்டல கடற்கரையில், 3,500 கிலோ; சோழிங்கநல்லுார் மண்டல கடற்கரையில், 5,000 கிலோ என, மொத்தம், 45,500 கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டது. இப்பணிகளில், 421 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை