உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட் மேம்பாலத்தில் வரிசை கட்டும் லாரிகள் விபத்து நடக்கும்முன் முறைப்படுத்துவது அவசியம்

ஏர்போர்ட் மேம்பாலத்தில் வரிசை கட்டும் லாரிகள் விபத்து நடக்கும்முன் முறைப்படுத்துவது அவசியம்

சென்னை:சென்னை விமான நிலைய ஜி.எஸ்.டி., சாலையில், தடை செய்யப்பட்ட நேரத்திலும் கனரக வாகனங்கள் வரிசை கட்டி செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வாகனங்களில் வருவோர், ஜி.எஸ்.டி., சாலை வழியாக உள்ளே நுழைவது வழக்கம். விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு, 50,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.பெரும்பாலானோர் வாடகை கார் அல்லது செயலி வாயிலாக, 'புக்கிங்' செய்து செல்கின்றனர். வி.ஐ.பி., நகர்வுகள் இருப்பதால் போலீசார் எப்போதும் பணியில் இருப்பர் என்பதால், நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் செல்லும்.இந்நிலையில், பல்லாவரம் மேம்பாலம் மற்றும் ஏர்போர்ட் மேம்பாலத்தில், காலையில், 'பீக் ஹவர்' நேரங்களில் லாரிகள், கனரக வாகனங்கள் வரிசைகட்டி மேம்பாலத்தின் மீது செல்கின்றன.இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனம் பழுதானால் கடும் நெரிசலுக்கு வழிவகுத்து விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த சில வாரங்களாக, பல்லாவரம் மேம்பாலம் மற்றும் விமான நிலைய மேம்பாலம்மீது, காலை நேரத்தில், அதிக கனரக வாகனங்கள் செல்கின்றன. இது, விமான பயணியர், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட நேரங்களில்தான், கனரக வாகனங்கள் நகருக்குள்ளே வர வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி., சாலையில் இஷ்டத்திற்கு லாரிகள் மேம்பாலத்தை ஆக்கிரமித்து செல்கின்றன. சில கனரக வாகனங்கள் ஆமை வேகத்தில், மேம்பாலத்தின் மேல் நகர்ந்து செல்கின்றன.இதனால், பின்னால் வரும் வாகனங்களும் அப்படியே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. 'ஏர்போர்ட் பணிக்கு செல்கிறோம்' என, ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சில லாரிகள் மீனம்பாக்கத்தை தாண்டி செல்கின்றனர். சம்மந்தப்பட்ட போலீசாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கப்பட நேர பலகையாவது வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தடுக்க முடியலைபோக்குவரத்து போலீசார் கூறியதாவது:காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, எந்த கனரக வாகனங்களும் உள்ளே வரக்கூடாது. லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஏர்போர்ட் மேம்பாலம் வழியாக, பழைய விமான நிலையம் வரை சென்று, 'யு - டர்ன்' செய்ய மட்டுமே அனுமதி உள்ளது. அவசர கட்டுமான பணிகள் போன்றவற்றுக்கு மட்டும், சில லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. விதிகளை மீறி சில வாகனங்கள் வருவது உண்மைதான். முக்கிய புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசில் சிலர் அனுமதி மீறி செல்கின்றனர்; எங்களால் தடுக்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ