உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறநகரில் தொடரும் நெரிசலுக்கு தீர்வுகாண முயற்சி! 16 உள்ளூர் சாலைகளை விரிவாக்க அறிவிப்பு

புறநகரில் தொடரும் நெரிசலுக்கு தீர்வுகாண முயற்சி! 16 உள்ளூர் சாலைகளை விரிவாக்க அறிவிப்பு

சென்னை சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் பெருகி வரும் நிலையில், நெரிசலுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை பெருநகரில் வெளிவட்ட சாலையை ஒட்டி, 16 கிராமங்களில், உள்ளூர் சாலைகளை விரிவாக்கும் பணிகளை அரசு துவக்க உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்கள் குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தாம்பரம் முதல் புழல் வரையிலான 32 கி.மீ., புறவழிச்சாலை, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரையிலான 62 கி.மீ., வெளிவட்ட சாலை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.இந்த சாலைகளை ஒட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தொழிற்சாலைகள் அதிகளவில் துவக்கப்பட்டுள்ளன.குறிப்பாக திருமுடிவாக்கம், குன்றத்துார், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன. இங்கு, வெளிவட்ட சாலை அளவுக்கு, உள்ளூர் சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. தொழிற்சாலைகளுக்கு பணியாளர்கள் வந்து செல்வது, தொழில் நிறுவனங்களுக்கான பொருட்கள் குறித்த நேரத்தில் வந்தடைவதற்கும், குறுகலான சாலைகள் பெரும் சவாலாக உள்ளன. இப்பகுதிகள், பெரும்பாலும் ஊராட்சிகளாக இருப்பதால், சாலை மேம்பாட்டிற்கு தங்கள் நிதியை செலவிட முடியாத நிலையில் உள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ளூர் சாலைகள், அணுகு சாலைகள் இருந்தாலும், அவை தங்கள் வரம்பிற்குள் இல்லை என்று, நெடுஞ்சாலை துறையும் ஒதுங்கிக் கொள்கிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சீமாபுரம், காஞ்சிபுரத்தில் திருமுடிவாக்கம், பழந்தண்டலம் பகுதிகளில், உள்ளூர் சாலை விரிவாக்கத்தில் சேர்க்கப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், புழல், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திலும், 16 இடங்களில் சாலை விரிவாக்கத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வரைபடங்களை பார்க்கவும், சர்வே எண்கள் உள்ளிட்ட விபரங்கள் அறியவும், எழும்பூர் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், தகவல் மற்றும் ஆலோசனை மையத்தை அணுகலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: சாலை விரிவாக்கத்துக்கான நிலங்களை அறிவிப்பதுடன், சி.எம்.டி.ஏ., நின்றுவிடக்கூடாது. இச்சாலைகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டத்தை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான், சென்னை பெருநகரில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு உறுதி செய்யப்படும். உள்ளூர்வாசிகள் மட்டுன்றி, தொழில்நிறுவனங்களின் சிரமத்தை குறைக்க முடியும். நெரிசல் இல்லாத போக்குவரத்து என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திட்டம்

சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டத்தின் அடிப்படையில், சென்னை புறவழிச் சாலை, சென்னை வெளிவட்ட சாலை உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு புதிய சாலைகளும், மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த புதிய வழித்தடங்களை ஒட்டிய கிராமங்களின் உள்ளூர் சாலைகளை மேம்படுத்தி, பிரதான சாலைகளுடன் இணைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்புடன், சென்னை பெருநகர் சாலை 'வலைப்பின்னல்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக, 422 சாலைகளை, பிரதான சாலைகளுக்கு இணையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 653 இடங்களில், புதிய சாலைகள் அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ