சுனாமியால் பாதிக்கப்பட்டோர் காசிமேடில் வீடு கோரி மறியல்
காசிமேடு: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால், காசிமேடில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு டிச., 26 ஏற்பட்ட சுனாமி பாதிப்பின்போது, நாகூரார் தோட்டம், சீனிவாசபுரம், பல்லவன் நகர், திடீர் நகர், அண்ணா நகர், சீனிவாசபுரம், பனைமரத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்த மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மக்கள், திருவொற்றியூர், கார்கில் நகரில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். அங்கு தீ விபத்து ஏற்பட்டதில், அங்கிருந்து வெளியேறிய மக்களுக்கு, மாற்று குடியிருப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கார்கில் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, சுனாமியால் பாதிக்கப்பட்ட 158 குடும்பத்தினர், தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் விளைவாக, 2017ல், கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளி பங்கீட்டு தொகை முன்பணமாக, 50,000 ரூபாய் வழங்கியும், மாதந்தோறும், 2,000 ரூபாய் தருவதாக கூறி, எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், இந்திய மீனவர் மகளிர் தொழிற்சங்கம் சார்பில், சுனாமியால் பாதிக்கப்பட்ட, 158 குடும்பத்தினருக்கும் வீடு வழங்கக்கோரி, 30க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், காசிமேடு - சூரியநாராயணா சாலையில், திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, உதவி கமிஷனர் ராஜ்பால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்து, சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். பின், அவர்கள், திருவல்லிக்கேணி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.