உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரிகளிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

வியாபாரிகளிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

ஆவடி,மளிகை வியாபாரிகளுக்கு தெரியாமல், தனியார் செயலி வாயிலாக, அவர்கள் பெயரில் கடன் பெற்று, 27 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடியைச் சேர்ந்தவர் முனியன், 45; மளிகை வியாபாரி. தன் கடைக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை, 'நிஞ்சா கார்ட்' என்ற ஆன்லைன் வாயிலாக வாங்கி வந்தார். அவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குவதால், 'நிஞ்சா கார்ட்'டின், ஒப்பந்த நிறுவனமான, 'டிரில்லியன் லோன்' செயலி, 60 நாட்கள் காலக்கெடு உடன், கடன் வழங்க முன் வந்தது. அதை அறிந்த, 'நிஞ்சா கார்ட்' நிறுவன முன்னாள் ஊழியர்களான, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த முகேஷ்வரன், 35; நீலாங்கரையைச் சேர்ந்த தர்மராஜ், 37 இருவரும், முனியன் உட்பட பல வியாபாரிகளிடம், கடன் செயலி வாயிலாக, 27.70 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அந்த பணத்தை வெளியில் வட்டிக்கு கொடுத்து சம்பாதித்து வந்துள்ளனர். முனியன் தனியார் வங்கியில் கடன் பெற சென்றபோது, 'சிபில் ஸ்கோர்' குறைவாக இருப்பது தெரிந்தது. விசாரித்தபோது, டிரில்லியன் லோன் செயலில், தன் பெயரில் மோசடியாக சிலர் கடன் பெற்று, மாத தவணை செலுத்தாமல், 1.46 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் முனியன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து, மோசடி செய்த முகேஷ்வரன், தர்மராஜ் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி