மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்
சென்னை, டாஸ்மாக் கடையில் மதுவாங்க வந்தவரிடம், மொபைல் போன் திருடிய வழக்கில், பழைய குற்றவாளி உட்பட இருவரை கைது செய்த போலீசார், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.மதுரையைச் சேர்ந்தவர் லோகேஸ்மூர்த்தி, 27. இவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் தங்கி, ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த 9ம் தேதி இரவு, அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு திரும்பியபோது, அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போனை மர்மநபர் திருடியது தெரியவந்தது.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்த சூர்யா, 29, திருவொற்றியூரைச் சேர்ந்த விஜய், 28, ஆகிய இருவரும், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், கூட்டமாக உள்ள டாஸ்மாக் கடையை தேர்ந்தெடுத்து, அங்கு மதுவாங்க வருவோரிடம் மொபைல் போனை திருடி வந்தது, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.