உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் மீடியனில் மோதிய பைக் கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி ஐ.பி.எல்., பார்த்து திரும்பியபோது பரிதாபம்

நள்ளிரவில் மீடியனில் மோதிய பைக் கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி ஐ.பி.எல்., பார்த்து திரும்பியபோது பரிதாபம்

ஆலந்துார் :ராமாபுரம், பாரதி சாலை, காளியப்ப உடையார் தெருவை சேர்ந்த கென்னடி மகன் கேல்வின் கென்னி, 19. இவர், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில், பி.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.ராமாபுரம், ராயலா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சித்தார்த்தன், 19. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில், கெமிக்கல் இன்ஜினியரிங், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் மாலை, சேப்பாக்கத்தில் நடந்த சென்னை- - மும்பை அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க, புதிய ரக என்பீல்டு பைக்கில் புறப்பட்டனர்.வேளச்சேரியில் பைக்கை நிறுத்திவிட்டு, ரயில் வாயிலாக ஸ்டேடியம் சென்று கிரிக்கெட்டை ரசித்தனர். பின், நள்ளிரவு வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக, ஜி.எஸ்.டி., சாலையை அடைந்தனர்.பைக்கை கேல்வின் கென்னி ஓட்டியுள்ளார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 650 குதிரை திறன் கொண்ட பைக், ஜி.எஸ்.டி., சாலையில் அதிவேகமாக பறந்தது.ஆலந்துார், ஆசர்கானா அருகே உள்ள மிகவும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பில் மோதியது.இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அவர்களுக்கு தலை, முகம், கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே கேல்வின் கென்னி பலியானார்.சித்தார்த்தன் மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்கு போராடினார். விபத்தை பார்த்த மக்கள், உடனடியாக, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர், சித்தார்த்தனுக்கு முதலுதவி அளிக்க முயன்றபோது, அவரும் உயிரிழந்தது தெரிந்தது.தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ