உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காற்றில் பறந்த இரு ராட்சத பந்தல்கள் துணை முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு

காற்றில் பறந்த இரு ராட்சத பந்தல்கள் துணை முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு

எண்ணுார்:துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியில், அரேபிய பாணியில் அமைக்கப்பட்டிருந்த இரு ராட்சத பந்தல்கள், பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பறந்து சென்று சாலையில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பந்தலில் அமர்ந்திருந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நிருபர்கள், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்கும் விதமாக, சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், 3.75 கோடி ரூபாயில் கொடுங்கையூர் கால்வாய்; 6.85 கோடி ரூபாயில் கேப்டன் காட்டன் கால்வாய்; 38 கோடி ரூபாயில் மணலி, ஆமுல்லைவாயல் மேம்பாலம் அருகே, புழல் உபரி நீர் கால்வாய் உள்ளிட்டவற்றை துார்வாரும் பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். இதில், எண்ணுார் - வள்ளுவர் நகரில் முடிந்த பகிங்ஹாம் கால்வாய் துார்வாரும் பணியை காண 12:30 மணிக்கு வந்தார். அவர் வருகைக்காக, 'அரேபிய பந்தல்' போடப்பட்டிருந்தது; திரை சீலைகள் கட்டப்பட்டிருந்தன. பணிகளை பார்வையிட்டு 12:45 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி புறப்பட்டு சென்றார். அவர் கிளம்பிய சில வினாடிகளில், அங்கு போடப்பட்டிருந்த இரண்டு ராட்சத பந்தல்கள், சுழன்றடித்த பலத்த காற்றால், 100 அடி துாரத்திற்கு பறந்து வந்து, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் விழுந்தன. இதில், பந்தலுக்குள் அமர்ந்திருந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் காயமின்றி தப்பினர். எனினும், தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு, பந்தல் கம்பி விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்நேரம், வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை. பகிங்ஹாம் கால்வாயில் துார்வாரப்பட்ட மணல் மேடு மீது, ஸ்திரத்தன்மையின்றி அமைக்கப்பட்டிருந்த ராட்சத பந்தல்கள், சுழன்றடித்த காற்றிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பறந்து சென்று சாலையில் விழுந்ததாக தெரிகிறது. முன்னதாக, உதயநிதி அளித்த பேட்டி: ஓட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில், துார்வாரும் பணிகள் நடந்துள்ளன. குறிப்பாக, ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, நீர்வழிப்பாதைகள் சீர்படுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்தாண்டு மழைக்கு, வடசென்னையில் நிச்சயம் பாதிப்பு இருக்காது. அடுத்த ஒரு மாதத்தில், விடுபட்ட அனைத்து வெள்ளத்தடுப்பு பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 31, 2025 17:03

12.30 க்கு வந்து, 12.45 க்கு கிளம்பிச்சென்றவர் என்ன அழகில் 'ஆய்வு' செய்திருப்பார்? அதிகாரிகள் கூட்டம் வால் பிடித்துக்கொண்டு stage வரை வந்துவிட்டு, அப்படியே திருப்பி அனுப்பியிருப்பார்கள் இந்த 'மஹா விமரிசை' ஆய்வுக்கு பந்தலுக்கே எத்தனை லட்சம் கணக்கு காட்டியிருப்பார்களோ? மக்கள் வரிப்பணம் ஆழும் பாலுமானதுதான் இந்த ஆய்வினால் கண்ட பலன்


புதிய வீடியோ