உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பேருந்து மோதி நேற்றும் இருவர் பலி தொடர் விபத்து நெருக்கடிகள் காரணம் என ஓட்டுநர்கள் புகார்

மாநகர பேருந்து மோதி நேற்றும் இருவர் பலி தொடர் விபத்து நெருக்கடிகள் காரணம் என ஓட்டுநர்கள் புகார்

சென்னை :சென்னையில் மாநகர பேருந்துகளால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. மாநகர பேருந்துகள் மோதி நேற்றும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். பணி நெருக்கடிதான் விபத்துக்களுக்கு காரணம் என, எம்.டி.சி., ஓட்டுநர்கள் புகார் கூறும் நிலையில், அதற்கு அரசு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும், 32 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதுமான பேருந்துகள் இல்லை. அதேசமயம், பணியாளர் பற்றாக்குறையால், பேருந்துகளை முறையாக இயக்குவதிலும் சிக்கல் உள்ளது.அதனால், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகளை இயக்குவதில்லை, தான்தோன்றி தனமாக செயல்படுவதாக புகார் உள்ளது.தவிர, பேருந்து நிறுத்தங்களில் முறையாக நிறுத்தாமல் செல்வது, முன்னே செல்லும் வாகனங்களை முந்துவது, வாகன ஓட்டிகளுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் செல்வது என, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.அதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஒரு மாதத்தில், தறிகெட்டு பேருந்துகளை இயக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர்.ஐ.டி., ஊழியர்அம்பத்துார், வெங்கடாபுரம், கே.கே.சாலை பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா, 25; அம்பத்துாரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தின் ஊழியர். நேற்று காலை, 9:00 மணிக்கு, தன் 'யமஹா பாசினோ' ஸ்கூட்டர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அம்பத்துார் உதவி ஆணையர் அலுவலகம் முன், சி.டி.எச்., சாலை அருகே, அம்பத்துார், புதுாரில் இருந்து வள்ளலார் நகருக்கு செல்லும், தடம் எண்: '48பி' அரசு பேருந்து, ஸ்கூட்டி மீது மோதியது.இதில் தடுமாறி விழுந்த பூர்ணிமா மீது, அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலே இறந்தார். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரகுபதி, 37, பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.ஆட்டோ டிரைவர் பலிஅதேபோல், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுநர் முருகன், 31, நேற்று முன்தினம் மாலை, 'டி.வி.எஸ்., என்டார்க்' வாகனத்தில், தாம்பரம், ராஜாஜி சாலையில் சென்றார். அவருடன் நண்பர்கள் சுரேந்தர், சஞ்சய் ஆகியோரும் பயணித்தனர்.தாம்பரத்தில் இருந்து குன்றத்துார் செல்லும் தடம் எண்: '89டி' அரசு பேருந்து, ஸ்கூட்டரில் மோதியது. இதில், மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், முருகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ,குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்; மற்ற இருவர் லேசான காயமடைந்தனர்.திருநின்றவூர் அடகு கடையில் பணிபுரிந்த, செங்குன்றம் பூச்சி அத்திப்பேடைச் சேர்ந்த போப்பா ராம்ஜி, 52, என்பவர், ஏப்., 3ம் தேதி இரவு, ஆவடி பேருந்து நிலையத்தில் தடம் எண்: '77பி' பேருந்தில் ஏறி படியில் தொங்கினார்.அப்போது, அங்கு நின்றிருந்த செங்குன்றம் செல்லும் தடம் எண்: 62 பேருந்துக்கும், '77பி' பேருந்துக்கும் இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அதே நாளில், கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி வீடு திரும்பி கொண்டிருந்த ரகுபதி, அவரது புஷ்பா மீது, பெங்களூரு செல்லும் அரசு பேருந்து மோதியது. இதில், கணவர் கண் முன் புஷ்பா இறந்தார்.கடந்த ஏப்., 2ம் தேதி, பிராட்வே பேருந்து நிலையத்தில், துரைப்பாக்கம் செல்வதற்காக காத்திருந்த மூதாட்டி பழனியம்மாள், 50, மீது, திருவேற்காடு செல்லும் தடம் எண்: 'எம்50' மாநகர பேருந்து மோதியதில் இறந்தார்.பேருந்துகளை அஜாக்கிரதையாக இயக்கும் அரசு பேருந்து ஓட்டுநர்களால், அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர்கிறது. இறப்பு சம்பவம் மட்டுமின்றி, ஏராளமான விபத்துகளில் பலர் காயமடைந்த சம்பவங்களும் உள்ளன.ஒப்பந்த ஓட்டுநர்களால் தான் அதிகம் நடப்பதாகவும், அதை தடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர் கூறியதாவது:தினமும், அந்தந்த வழித்தடத்தின் துாரத்திற்கு ஏற்றார்போல், 'சிங்கிள்' எனும் நடை இயக்க வேண்டும் என்கின்றனர். குறைந்தது எட்டு முதல் 10 சிங்கிள் ஓட்டச் சொல்கின்றனர். இந்த இலக்கை முடித்தால் மட்டுமே, ஷிப்ட் பணி முடித்து வைக்கப்படுகிறது.தவிர, மெட்ரோ, மேம்பால பணிகள் ஆங்காங்கே நடப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கடந்து செல்லவே முடியவில்லை.சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்குவது என்பது கடுமையான பணியாக இருக்கிறது. இதில், போதிய பயிற்சி இல்லாமல் வரும் புதிய ஒப்பந்த ஓட்டுநர்களால், அதிகம் விபத்துகள் ஏற்படுகின்றன.மற்றொறபுரம் பணியை முடிக்க வேண்டுமென்ற மன உளைச்சலில் ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்குவதாலும், விபத்துகள் நடக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'காலத்துக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் பஸ்களின் இயக்க நேரத்தை மாற்றி உள்ளோம். எஞ்சியுள்ள சில வழித்தடங்களிலும் இயக்க நேரம் மாற்றப்படும்' என்றனர்.கடந்த 2022 - 23ம் ஆண்டில், மாநகர பேருந்துகள் தறிகெட்டு இயக்கியதில், 117 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில், 78 பேர் உயிரிழந்துள்ளனர்.'ரன்னிங் டைம்' மாற்ற வேண்டும்தற்போதுள்ள வாகனங்கள் எண்ணிக்கை, மெட்ரோ ரயில் போன்ற திட்டப்பணிகளால் சாலைகள் குறுகி, பல மடங்கு நெரிசல் அதிகரித்துள்ளது. ஆனால், 1972ல் நிர்ணயிக்கப்பட்ட, 'ரன்னிங் டைம்' எனும் பேருந்து இயக்கும் நேரத்தை மாற்றவில்லை.அளிக்கப்பட்ட நேரத்திற்குள், பேருந்துகளின் நடைகளை முடிக்க வேண்டுமென நெருக்கடி ஏற்படுத்துவதால், ஊழியர்கள் திணறுகின்றனர். இதனால், ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, விபத்து நடக்கிறது. 'ரன்னிங் டைம்' மாற்றுவதே முக்கிய தீர்வாக இருக்கும்.- போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள்

532 ஓட்டுநர் பணியிடம்

தனியாருக்கு அழைப்பு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஆட்களை நியமிக்க, 2022ம் ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது.இதனால், 532 ஓட்டுநர்களை வழங்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நிறுவனம், குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பேருந்து, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள், 'டெண்டர்' அறிவிப்பில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasidharan
ஏப் 08, 2025 14:01

யாருக்கு நஷ்டம் .அதிகாரிகள் தங்களின் சுய லாபத்தினால் அப்பாவி மக்கள்தான் தங்கள் உயிரை விடுகிறன்றனர். ஒவ்வொரு குடுமம்பமும் எவ்வளவு கனவுகளுடன் இருந்திருக்கும். அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு இனியும் உயிர் சேதம் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும் .


chennai sivakumar
ஏப் 08, 2025 08:37

துஷ்டனை கண்டால் தூர விலகு என்ற பழமொழியை நினைவில் கொண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சென்றால் மாநகர பேருந்துகளின் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.


Ram
ஏப் 08, 2025 06:58

நான் நிரஃயதடவை சிகப்பு விளக்கு வந்தும் நிற்காமல் செல்லும் மாநகர பேருந்துகளை பார்த்திருக்கிறேன் , அதுவும் அதிகாலையில் கேட்கவேவேண்டாம் . சிகப்பு விளக்கை கடக்கும்போது மாநகர பஸ்சுக்கு பின்னல் செல்லும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போலீசார் மாநகர பஸ்சை கண்டுகொள்வதில்லை …அவ்வளவு ஏன் ஒரு மாதத்தில் எத்தனை பஸ்க்கு அபராதம் போட்டிருக்கிறார்கள் என்று போலீசை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம்


சமீபத்திய செய்தி