டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மேலும் இருவர் கைது
ஆவடி, ஆவடி அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடியை சேர்ந்தவர் மேரி ஜேனட் டெய்சி, 62 ; ஓய்வு பெற்ற விரிவுரையாளர். அவரது மொபைல் எண்ணிற்கு, கடந்த ஜூலை 18ல், மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து அழைப்பதாக கூறி, மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, 'உங்கள் பெயரில் வாங்கிய சிம் கார்டை பயன்படுத்தி, சமூக விரோத செயல் நடந்துள்ளது; உங்களை, 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்கிறோம்' என்று மிரட்டி உள்ளனர்.இதனால் பயந்து போன ஜேனட் டெய்சி, மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு, 38.16 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பின், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஜூலையில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து, பிஜாய், 33 என்பவரை, ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், சி.பி.ஐ., அதிகாரி, மும்பை சைபர் கிரைம், அமலாக்கத்துறை அதிகாரி என்றெல்லாம் கூறி பலரை ஏமாற்றியது தெரிந்தது. ஆன்லைன் பங்குச் சந்தை மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றி பெற்ற பணம் பெற்று, வெளிநாடுகளில், 'கிரிப்டோ கரன்சி' யாக மாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.இந்நிலையில், எம்.பி.ஏ., படித்து, லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோத புரோக்கராக செயல்பட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது இலியாஸ், 36; பர்மா பஜாரில் கடை நடத்தும் அறந்தாங்கியை சேர்ந்த சாதிக் பாட்சா, 39 ஆகியோரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, மோசடிக்காக பயன்படுத்திய ஒரு டேப், மூன்று மொபைல் போன்கள், பணம் எண்ணும் இயந்திரம், 46.22 லட்சம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.