வாலிபர் கொலை இருவர் கைது
வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிரி, 46; மாற்றுத்திறனாளியான இவர், பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். கிரியுடன், அவரது மகன், கூலித்தொழிலாளியான அஜித்குமாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கிரி வீட்டிற்கு வந்த போது, அஜித்குமார் காயங்களுடன் இறந்து கிடந்தார். புகார் படி, கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த ஜன., 26ம் தேதி, அஜித்குமாரின் பாட்டி இறந்துள்ளார். பாட்டியின் துக்க நிகழ்விற்கு, மணலி, சேலவாயிலை சேர்ந்த ஜனார்த்தனன், 20; கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பார்த்திபன், 20 ஆகியோர் பந்தல் போட்டுள்ளனர். பந்தல் வாடகை பணம் 8,500 ரூபாயை அஜித்குமாரை கேட்டுள்ளனர். அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். கோபமடைந்த இருவரும் குடிபோதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அஜித்குமார் வீட்டிற்கு சென்றனர். அவர் பணம் தர மறுத்த நிலையில், குடிபோதையில் இருந்த பார்த்திபன் பிடித்து கொள்ள, ஜனார்த்தனன் கயிறால் இறுக்கி அஜித்குமாரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜனார்த்தன், 20, பார்த்திபன், 20 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.