சென்னை: போலி ஆவணங்கள் வாயிலாக கடன் பெற்று, வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள கனரா வங்கியில், கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், 'அப்ரினா ஸ்டீல்ஸ் ரோலிங் மில்ஸ், பஷீர் அன் கோ' ஆகிய நிறுவனங்களின் பெயரில், பல லட்சம் ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இரு நிறுவனங்கள் மீது, வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.,யிடம் புகார் செய்தது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், போலி ஆவணங்கள் வாயிலாக, மேற்படி நிறுவனங்கள் பெயரில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குதாரரான நசீர் அகமது, அவரது உறவினரான ஆசிக் அராபத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணை, சென்னை 11வது சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நசீர் அகமது மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, அவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 80 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஆசிக் அராபத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை 80 லட்சம் ரூபாயை, வங்கிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.