யு - 14 கிரிக்கெட் சேலம் சாம்பியன் பைனலில் காஞ்சிபுரத்தை வீழ்த்தியது
சென்னை,மாவட்டங்களுக்கு இடையிலான, 'யு - 14' கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், காஞ்சிபுரம் அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சேலம் அணி அபார வெற்றி பெற்றது.டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. 38 மாவட்ட அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சேலம் மற்றும் காஞ்சிபுரம் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதிப்போட்டி, இரண்டு இன்னிங்ஸ்; இரண்டு நாள் அடிப்படையில் கேளம்பாக்கத்தில் உள்ள வி.பி., நேஸ்ட் மைதானத்தில் நடந்தது.இதில், முதலில் பேட் செய்த சேலம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. அபாரமாக ஆடிய கேப்டன் முகமது ஸாபிர் ஏழு பவுண்டரி, நான்கு சிக்சருடன் 100 ரன்கள் குவித்தார். முகமது அர்பாஸ் 44 ரன்கள் எடுத்தார்.அடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 43.2 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இரண்டாவதுஇன்னிங்சை ஆடிய சேலம் அணி, 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனால், சேலம் அணி 325 ரன்கள் முன்னிலை பெற்றது.இதையடுத்து, 326 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, இரண்டாவது இன்னிங்சிலும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 96 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டத்தை முடித்தது. இதனால் 229 ரன்கள் வித்தியாசத்தில், சேலம் அணி அபார வெற்றி பெற்றது.