ஊபர் ஆபீஸ் முற்றுகை ஓட்டுநர் சங்கத்தினர் கைது
கோயம்பேடு, கோயம்பேடு 100 அடி சாலை 'டென் ஸ்கொயர்' மாலில் 'ஊபர்' கால் டாக்சி நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் ஓட்டுநர்களை கொத்தடிமை போல் நடத்துவதை கண்டித்து, 'உரிமை குரல்' ஓட்டுநர் தொழிற்சங்கம் பொது செயலர் ஜாகிர் உசேன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.மேலும், ஆட்டோகளுக்கு குறைந்தபட்சம் கி.மீ.,க்கு 18 ரூபாய் கட்டணமாக வழங்கிடு; கால் டாக்சிகளுக்கு குறைந்தபட்சம் கி.மீ.,க்கு 25 ரூபாய் கட்டணமாக வழங்கிடு; கட்டணத்தை போக்குவரத்து கமிஷனர் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்; வாடிக்கையாளரிடம் பெறப்படும் கட்டணத்தில் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த, ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களை, கோயம்பேடு போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.