ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நவ., 28 ல் போட்டிகள் துவக்கம் அட்டவணை வெளியிட்டார் உதயநிதி
சென்னை, தமிழகத்தில் முதல் முறையாக, நவ., 28ல் துவங்கும் ஜூனியர் உலக கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் அட்டவணையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வெளியிட்டார். சென்னையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. தமிழக அரசின் ஆதரவில், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஜூனியர் ஆடவர் உலக கோப்பைகான ஹாக்கி போட்டி, தமிழகத்தில் முதல் முறையாக, நவ., 28ல் துவங்கி, டிச.,10 வரை நடக்க உள்ளது. போட்டிகள், சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கிலும், மதுரை ஹாக்கி அரங்கிலும் நடக்கின்றன. இத்தொடரில், 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஜூனில், போட்டிக்கான 'லோகோ' சென்னையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, தொடரின் அதிகாரபூர்வமான அட்டவணையை வெளியிட்டார். அட்டவணை சென்னை மற்றும் மதுரையில் தலா 12 அணிகள் மோதுகின்றன. சென்னை 'ஏ' பிரிவில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தன் முதல் போட்டியை, நவ.,28ல் சென்னையில், தென் அமெரிக்காவின் குடியரசு நாடான சிலியுடன் மோதுகிறது. அடுத்து, 29ம் தேதி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி, சென்னையில் 28ம் தேதி, சுவிட்சர்லாந்துடன் மோத உள்ளது. **