உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திட்டம் கோவையில் இன்று மத்திய அமைச்சர் ஆலோசனை

பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திட்டம் கோவையில் இன்று மத்திய அமைச்சர் ஆலோசனை

சென்னை: பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கோவையில் இன்று நடக்கிறது.நாடு முழுதும் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு, நுாற்பாலைகள் தள்ளப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பருத்தி உற்பத்தி இயல்பான அளவில் இருந்தாலும், அதன் தரம் குறைவாக உள்ளதால், உரிய விலை கிடைக்கவில்லை. மேலும், தற்போது சாகுபடி செய்யப்பட்டு வரும் பி.டி., ரக பருத்தியை பாதிக்கும் வகையில், டி.எஸ்.வி., வைரஸ் பரவி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், பருத்தி உற்பத்தி கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிதாக பருத்தி ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, கோவையில் இன்று பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு, மத்திய வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.இதில், வைரஸ் தாக்குதலை தாண்டி வளரக்கூடிய பருவ நிலைக்கு ஏற்ற, உயர் ரக பருத்தியை உருவாக்குவது குறித்து செயல் திட்டம் வகுக்கப்பட உள்ளது. இதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பருத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். தமிழக அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தொலைபேசியில் கருத்து

பருத்தி சாகுபடி அதிகரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்களுக்கு, மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளது. கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவிக்க வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கை:பருத்தி உற்பத்தி திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிவதில், மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, பொது மக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, 1800 1801551 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.இந்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும். நாட்டின் பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான விரிவான செயல் திட்டத்தை நாம் இணைந்து உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை