73 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி ரூ.4.15 கோடி பறித்த உ.பி., வாலிபர் சிக்கினார்
சென்னை: முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, 4.15 கோடி ரூபாய் பறித்த, உத்தர பிரதேச மாநில வாலிபரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன், 73; ஓய்வு பெற்ற டி.வி.எஸ்., ஊழியர். செப்., 26ம் தேதி, 'வாட்ஸாப்' மூலம் இவரிடம் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என, அறிமுகப்படுத்தி உள்ளார். 'உங்களது பெயரில் பெறப்பட்ட மொபைல் போன் சிம் கார்டு, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது' எனக் கூறியுள்ளார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போலீஸ் கைது நடவடிக்கையை தவிர்க்க, ஆர்.பி.ஐ., சரிபார்ப்பு எனக் கூறி, பல வங்கி கணக்குகளுக்கு பெரும் தொகையை மாற்றுமாறு மிரட்டி உள்ளார். இதற்கு பயந்த முதியவர், மர்ம நபர் கொடுத்த வெவ்வேறு கணக்குகளுக்கு, செப்., 26 முதல் அக்., 10 வரை, 4.15 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார். மிரட்டல் தொடரவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீவத்ஸன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 'வாட்ஸாப்' எண் மூலம் விசாரித்ததில், உத்தர பிரதேசம் மாநிலம், ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ்குமார், 23, என்பவர் மோசடி செய்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் உத்தர பிரதேசம், ஜான்சிக்கு விரைந்து சென்று, உள்ளூர் போலீசாரின் உதவியுடன், கடந்த 28ம் தேதி மணீஷ்குமாரை கைது செய்து, இரண்டு மொபைல்போன்கள், ஆதார் கார்டு, ஏ.டி.எம்., கார்டுகள், வங்கி பாஸ் புத்தகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உத்தர பிரதேசம், ஜான்சியில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 30ம் தேதி சென்னை அழைத்து வந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 'இது போன்ற மிரட்டல்கள் வந்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகாரளியுங்கள்; மோசடிகளில் சிக்காதீர்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.