வரலட்சுமி நோன்பு கோவில்களில் விமரிசை
சென்னை, ஆடி மாத மூன்றாவது வெள்ளி, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர். வரலட்சுமி நோன்பு அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். சுமங்கலிப் பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், நல்ல கணவர் அமைய வேண்டி கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்வர். வடபழனி முருகன் கோவில் வடபழனி முருகன் கோவிலில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனுக்கு, நேற்று காலை மஞ்சள் காப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை புடவை சார்த்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 25க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் இணைந்து, லலிதா சகஸ்ரநாமம், பாராயணம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமாக ரவிக்கை துணி, மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மனை தரிசக்க வந்த, 1,000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களுக்கும், மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது. அஷ்டலட்சுமி கோவில் பெசன்ட்நகர், அஷ்டலட்சமி கோவிலில், நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மங்கலப் பொருட்கள் வைத்து பூஜையும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், இரவு சாற்று முறை, சயனப் பூஜையும் நடந்தது. நேற்று காலை முதல், தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர்களுக்கு அஷ்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. பச்சையம்மன் கோவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திருமுல்லைவாயில் பச்சையம்மன், மன்னாதீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசயைில் நின்று பச்சையம்மனை வழிபட்டனர். அதேபோல, பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடத்தப்பட்டது.