எம்.எம்.டி.ஏ., காலனி பணிமனையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்
அரும்பாக்கம்,அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அரும்பாக்கம் பகுதியில், எம்.எம்.டி.ஏ., காலனி பேருந்து பணிமனை செயல்படுகிறது.இங்கிருந்து, பிராட்வே வரை செல்லும், 'தடம் எண் 15ஜி' பேருந்துகளும், அண்ணா சதுக்கம் வரை செல்லும் 'தடம் எண் 27 பி' பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இந்த நிலையத்தில் இருந்து, தினமும் சூளைமேடு, பெரியார் பாதை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையம், போதிய பாராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சுவர் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கழிப்பறையும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது.இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான பின், மோசமான கழிப்பறை மூடப்பட்டு, புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது.தற்போது, காலை முதல் மாலை வரை, பணிமனையில் தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.அதேபோல், சில நேரங்களில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் கடைகளுக்கு வரும் வாகனங்களும், அங்கு நிறுத்தப்படுகின்றன.இவ்வாறு அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.