குன்றத்துார் நான்கு முனை சந்திப்பில் நெரிசலில் தத்தளிக்கும் வாகனங்கள்
குன்றத்துார்;குன்றத் துார் நான்குமுனை சந்திப்பில், சிக்னல் அமைத்தும் அது இயங்காததால், தினசரி நெரிசலில் வாகனங்கள் தத்தளிக்கின்றன. குன்றத்துார் அரசு ஆண்கள் பள்ளி அருகே, நான்கு சாலை சந்திப்பு உள்ளது. போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், இங்கு இணைகின்றன. இந்த வழியே பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அண்மையில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை சிக்னல் இயக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டம் போல் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. தினசரி வாகனங்கள் நெரிசலில் தத்தளிக்கின்றன. எனவே, அங்குள்ள சிக்னலை இயக்கி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.