மேலும் செய்திகள்
விக்டோரியா அரங்கை காண முதல் நாளே திரண்ட மக்கள்
27-Dec-2025
சென்னை: தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கம், மக்கள் பார்வைக்கு அனுமதித்த ஒரே நாளில் மூடப்பட்டுவிட்டது. ரிப்பன் மாளிகை அருகே, சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா அரங்கம், 32.62 கோடி ரூபாய் மதிப்பில், தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் தரைதளத்தில் அருங்காட்சியகம் இடம் பெற்றுள்ளது. வெளிப்புற பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சி பகுதி அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்த பொது அரங்கமும் உள்ளது. பழைய சென்னை மாநகரின் நினைவுகளை உயிர்பிக்கும் விக்டோரியா அரங்கை பொதுமக்கள், 26ம் தேதி முதல் பார்வையிடலாம் என, மாநகராட்சி தெரிவித்தது. இதற்கு, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையளதளம் வாயிலாக, விக்டோரியா பொது அரங்கம் என்பதை தேர்வு செய்து, கட்டணமின்றி பார்வையிடலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம், 50க்கும் மேற்பட்டோர் விக்டோரிய அரங்கை பார்வையிட்டனர். இந்நிலையில், ரிப்பன் மாளிகையை சுற்றியுள்ள மக்கள், முன்பதிவு செய்யாமல், எங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். துாய்மை பணியாளர்கள் போராடுவதற்காக ரிப்பன் மாளிகை வர உள்ளதாவும் தகவல் வெளியானது. இதனால், தேதி குறிப்பிடாமல் விக்டோரியா அரங்கம் நேற்று மூடப்பட்டது. இணைய தளத்திலும் முன்பதிவு செய்ய முடியவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'விக்டோரிய அரங்கத்தை பார்வையிட முன்பதிவு செய்யும் இணையதளத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேறு ஏதும் காரணம் இல்லை. வரும், 30ம் தேதிக்கு பின், மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
27-Dec-2025