நள்ளிரவில் விநாயகர் கோவில் அகற்றம்
அம்பத்துார், அம்பத்துார், கள்ளிக்குப்பம், இந்திரா தெருவில், சிறிய அளவிலான விநாயகர் கோவில் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இக்கோவில், பகுதிவாசிகளுக்கு இடையூறாக இருந்தது. இதனால், அங்கிருந்து கோவில் அப்புறப்படுத்தப்பட்டது. பின், கள்ளிக்குப்பம் அணுகு சாலை மற்றும் கங்கை நகர் பிரதான சாலை சந்திப்பு அருகே, கடந்த ஜூன் மாதம் சிலை இல்லாமல் கோவில் மட்டும் வைக்கப்பட்டது. பின், கடந்த 23ம் தேதி நள்ளிரவு, கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பத்தூர், வெங்கடபுரத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர், தனது, ஜூஸ் கடையின் வாசலில் கோவில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அம்பத்தூர் மண்டலம் அதிகாரிகள் மற்றும் 82வது வார்டு உதவி பொறியாளரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், கோவிலை அங்கிருந்து அப்புறப்படுத்துவது குறித்து, உதவி பொறியாளர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, புதுார் காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்தினர். பின், உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள், நேற்று நள்ளிரவு கோவிலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.