மாணவியருக்கான வாலிபால் போட்டி லேடி சிவசாமி பள்ளி திரில் வெற்றி
சென்னை:சென்னையில் இயங்கி வரும் 'பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் அகாடமி' மற்றும் 'லட்சுமி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப்' இணைந்து, பள்ளிகளுக்கு இடையே மாணவியருக்கான வாலிபால் போட்டியை நடத்தின.கிண்டி அடுத்த நங்கநல்லுார், ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டியில், 12 பள்ளி அணிகள் பங்கேற்றன.இதில், மயிலாப்பூர் லேடி சிவசாமி, அசோக் நகர் ஜி.எச்.எஸ்.எஸ்., நங்கநல்லுார் ஜெய்கோபால் கரோடியா, சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய, நான்கு பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதி போட்டியில், சென்னை மேல்நிலைப் பள்ளி அணியும், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், 25 - -15, 25 - -12 என்ற நேர்செட்டில், சென்னை மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.மற்றொரு அரையிறுதியில் லேடி சிவசாமி பள்ளி அணி 25 - -13, 25- - 11 என்ற நேர்செட்டில் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அணியை வீழ்த்தியது.இறுதிப் போட்டியில், லேடி சிவசாமி பள்ளியும், சென்னை மேல்நிலைப் பள்ளியும் பலப்பரீட்சை நடத்தின. சமபலம் வாய்ந்த இரு அணி வீராங்கனையரும் தங்களுக்கான வாய்ப்புகளை புள்ளிகளாக மாற்றியதால், ஆட்டம் 'மதில் மேல் பூனை' என்பது போல் விறுவிறுப்பாக நடந்தது.உச்சக்கட்ட பரபரப்பிற்கு மத்தியில், லேடி சிவசாமி அணி வீராங்கனையரின் கை சற்று ஓங்கியது. இதனால், இறுதியில் 25 - -23, 25 - -23 என்ற புள்ளிக்கணக்கில், லேடி சிவசாமி பள்ளி அணியினர் 'திரில்' வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினர்.மூன்றாம் இடத்தை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், நான்காம் இடத்தை ஜெய்கோபால் கரோடியா பள்ளி அணியும் பிடித்தன.