குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்
மாதவரம்,காஸ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, ஏற்கனவே புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் ஓடியது. மாதவரம், புழல் சுற்று வட்டார பகுதி உட்பட பல இடங்களில், 'டோரண்ட் காஸ்' நிறுவனம் சார்பில், குழாய் பதிக்கும் பணி, சில மாதங்களாக நடந்து வருகிறது. குழாய் பதிப்பு முடிந்த இடங்களில், பள்ளத்தை சரியாக மூடாமல் செல்வதால், சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று, மாதவரம் பேருந்து நிலையம் அருகே, காஸ் நிறுவனம் தோண்டிய பள்ளத்தால், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் ஓடியது. இதனால், மூலக்கடையிலிருந்து செங்குன்றம் சின்ன ரவுண்டானா செல்லும் எம்.ஆர்.எச்., சாலை நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.