உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துார் - ஜி.எஸ்.டி., சாலை சுரங்கப்பாதை இலகு ரக வாகன வழித்தட திட்டம் என்னாச்சு? அமைச்சர்கள் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

ஆலந்துார் - ஜி.எஸ்.டி., சாலை சுரங்கப்பாதை இலகு ரக வாகன வழித்தட திட்டம் என்னாச்சு? அமைச்சர்கள் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

அமைச்சர்கள் உத்தரவிட்டு எட்டு மாதங்கள் ஆகியும், ஆலந்துார் - ஜி.எஸ்.டி., சுரங்கப்பாதையை இலகு ரக வாகனம் செல்லும் வழித்தடமாக மாற்ற, நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆலந்துாரில் ஜி.எஸ்.டி., சாலையை மக்கள் கடக்க வசதியாக, 2005ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், நடை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. 13 ஆண்டுகள் இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். 'யு - -டர்ன்' ஆலந்துார் மெட்ரோ ரயில் சேவை துவங்கிய பின், ஜி.எஸ்.டி., சாலையின் எதிர்புறம் உள்ள ஆசர்கானா பேருந்து நிலையத்திற்கு, பயணியர் மற்றும் பொதுமக்கள் சென்றடைவதற்காக, 2020ம் ஆண்டு பிப்., மாதம் நடைமேம்பாலம் திறக்கப்பட்டது. இதில், இரண்டு மின் துாக்கி, நான்கு நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், எல்.இ.டி., விளக்குகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனால், ரயில் நிலையம் அருகில் உள்ள நடை சுரங்கப்பாலம் பயன்பாடின்றி போனது. மடிப்பாக்கம், வாணுவம்பேட்டை, ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்துார் ஆகிய பகுதிகளில் இருந்து பூந்தமல்லி, கோயம்பேடு, பாரிமுனை வழித்தடங்களுக்கு செல்ல, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க வேண்டும். இதற்காக, ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்து பணிமனை சென்று பயணிக்க வேண்டும். அல்லது தலைமை அஞ்சலகம் எதிரே, 'யு - -டர்ன்' செய்து ஒரு கிலோ மீட்டர் துாரம் பயணிக்க வேண்டும். இதனால், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. ஜி.எஸ்.டி., சாலையில், 'யு - டர்ன்' செய்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. திட்ட மதிப்பீடு எனவே, ஆலந்துார் நடை சுரங்கப்பாதையை, இலகு ரக வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நமது நாளிதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் விளைவாக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான அன்பரசன் ஆகியோர், ஆலந்துார் சுரங்கப்பாதையை கடந்த பிப்., மாதம் பார்வையிட்டனர். அப்பாலத்தை இலகு ரக வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையாக, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு செல்லும் வகையில் மாற்ற திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகளை துவக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால், இன்றளவில் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என, கூறப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை மனதில் கொண்டு. சுரங்கப்பாதையை இலகு ரக வாகனம் செல்லும் வழித்தடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. - -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை