கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?
சென்னை, கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை குடிநீர் வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கொரட்டூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் கழிவுநீரை மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, கொரட்டூர் ஏரியில், வெளிப்படையாகவே கலக்க விடுகின்றன. இதனால், ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் மோசமடைந்துள்ளது. கழிவுநீரை கலப்பை தடுத்து, ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என, கொரட்டூர் ஏரி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தீர்ப்பாய உத்தரவுப்படி, கொரட்டூர் ஏரியில் உருவாக்கப்பட்டுள்ள பசுமை சூழல் குறித்த விவரங்களை தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக படங்களையும் தாக்கல் செய்தார். கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் விடப்படுவது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள், கழிவுநீர் கலப்பை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கழிவுநீர் விட்ட நிறுவனங்கள் மீது அபராதம் வசூல் நடவடிக்கை குறித்து, சென்னை குடிநீர் வாரியம் தவறாமல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவ., 4ல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.