உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரம் ஆணைய விசாரணையில் அரசுக்கு பயம் ஏன்?

துாய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரம் ஆணைய விசாரணையில் அரசுக்கு பயம் ஏன்?

சென்னை, துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களை, போலீசார் கைது செய்தபோது, சட்டத்தை மீறி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 'ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஏன் அரசு அச்சப்படுகிறது' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னையில், துாய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களை விடுவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பாலியல் தொல்லை குறித்து, மாநில மனித உரிமை ஆணைய விசாரணை கோரி, துாய்மை பணியாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''ஒரு நபர் ஆணையம் குறித்து, எந்த கோரிக்கையும் வைக்கப் படவில்லை. தங்கள் தரப்பு வாதமும் கேட்கப்படாமல் , ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில், ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏன், அரசு அச்சப்படுகிறது. இவ்விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர மட்டுமே, ஆணையம் நியமிக்கப்பட்டு உள்ளது என, கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'நாங்கள் அச்சப்படவில்லை. ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால், புதிதாக ஒருவரை ஆணையராக நியமிக்கலாம்' என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன், இவ்விவகாரத்தில் தன் விசாரணையை துவங்கலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை, அக்.,10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். காவல் துறை தங்களிடம் உள்ள ஆதாரங்களை, ஒரு நபர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை