ரேஸ் கிளப் நிலத்தை ஏன் ஏரியாக மாற்றக்கூடாது? அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்
சென்னை :'சென்னை, கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள 118 ஏக்கரில் ஏரி அமைக்காமல், பசுமை பூங்கா அமைக்க முடிவெடுத்திருப்பது ஏன் என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.வேளச்சேரி ஏரியின் பரப்பு ஆக்கிரமிப்புகளால் குறைந்துள்ளது. கழிவுநீர் கலப்பு, குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசனும் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் ஏரி அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நீர்வளத்துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், வேளச்சேரியின் முழு பரப்பளவு, ஆக்கிரமிப்பு பகுதிகள், சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ள, 23.50 கோடி ரூபாயிலான சீரமைப்பு பணிகள் குறித்த விபரங்கள் இல்லை.சீரமைப்பு பணிகளை முடித்தால், ஏரியின் நீர் பரப்பு 22 சதவீதம் அதிகரிக்கும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனால், பெருமழையை எதிர்கொள்ள முடியாவிட்டாலும், ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியுமா என்பது தெரியவில்லை.அரசால் கையகப்படுத்தப்பட்ட கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கரில், ஏரியை உருவாக்க முடியும். இதனால் மழை பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம்.ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க, தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ் கிளப் நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது என்பது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை, வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்துள்ளன. இதனால் 255 ஏக்கரில் இருந்த ஏரி, ஐந்தில் ஒரு பங்காக குறைந்துள்ளது. எனவே, வருவாய் துறை ஆவணங்களின்படி, வேளச்சேரி ஏரியின் முழு பரப்பளவு, தற்போதைய பரப்பளவு குறித்த விபரங்களையும், ஆக்கிரமிப்புகள் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீர்வளத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.வழக்கின் அடுத்த விசாரணை வரும் 15ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.