கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர், சுதர்சன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 41. இவரது மனைவி முத்துலட்சுமி, 35. இவர்கள், திருநின்றவூரில் பெட்டிக்கடை வைத்துள்ளனர்.நேற்று மாலை, இருவரும் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க, டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில், வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, செங்குன்றம் சென்றனர்.பாலவேடு சுங்கச்சாவடி அருகே, அணுகு சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத சரக்கு வாகனம், ஸ்கூட்டரில் மோதியது.இதில், பின்னால் அமர்ந்திருந்த முத்துலட்சுமி, தடுமாறி சாலையில் விழுந்தார். அவ்வழியே வந்த மற்றொரு சரக்கு வாகனம், முத்துலட்சுமி தலை மீது ஏறியதில், கணவன் கண் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், முத்துலட்சுமி உடலை மீட்டு, விபத்து ஏற்படுத்தி தப்பிய லாரியை தேடுகின்றனர்.