பர்மா நகரில் வன விலங்குகள்? கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
மணலி: மணலி மண்டலம், 16வது வார்டு, சடையங்குப்பம் - பர்மா நகரில் கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து காடு போல் உள்ளது. இங்கு, மான், நரி, மயில் உள்ளிட்ட வனவாழ் உயிரினங்கள் அதிகம் வசிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பாக, பர்மா நகர் - சடையங்குப்பம் இடைப்பட்ட பகுதியில், நாய்கள் மற்றும் காகங்களால் காயப்படுத்தப்பட்ட மான் குட்டி ஒன்று, அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: ஆடு - மாடு மேய்ச்சலுக்கு செல்பவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட மான்கள், காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரிவதையும், அவ்வப்போது, நரிகள் உலா வருவதையும் சிலர் பார்த்துள்ளனர். எனவே, வேறு வனவிலங்குகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, வனவிலங்குகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'புகார் வந்தால் மட்டுமே, அந்த விலங்கை எங்களால் மீட்க முடியும். மாறாக, கணக்கெடுப்பு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் தான், நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.